உங்கள் கருத்து: ஓரினம்.நெட் புதிய வடிவம்
திருனர் குழந்தைகள்
ஆண், பெண்ணுக்குரிய இரு பால் உறுப்புகளும் சேர்ந்த நிலையில் பிறப்பவர்கள், இரண்டு உறுப்போடு தோன்றி, அவை வளராத நிலையில் இருப்பவர்கள், ஒரு உறுப்புகூட இல்லாமல் பிறப்பவர்கள் இவர்கள் அனைவரும் திருனர்களாக கருதப்படுகின்றனர். இவர்களில் அரவாணிகள் என்றழைக்கப்படும் திருநங்கைகளும் அடங்குவர். ஆனால் பெரும்பாலான திருநங்கைகள் ஆணுக்குரிய அனைத்து உடல் அமைப்புகளையும் கொண்டு, ஆணாகத்தான் பிறக்கிறார்கள். ஆண் உடலுடன் பெண்ணின் மனம், செயல், குணாதிசயம் போன்றவை அவர்களிடம் இருக்கும். அதுபோலவே பெண்ணுக்குரிய அனைத்து உடல் அமைப்புகளையும் கொண்டு, பெண்ணாக பிறந்தாலும் ஆணின் மனம், செயல், குணாதிசயம் போன்றவை உள்ளவர்களை திருநம்பிகள் என அழைக்கிறோம்.
பெற்றோர் ஆண் குழந்தைக்கு பூச்சூடி, பொட்டு வைத்து, பெண் குழந்தைபோல் உடையையும் அணிந்து வளர்த்து வந்தால் அது காலப்போக்கில் பெண்தன்மை கொண்டு திருநங்கை ஆகிவிடும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. குழந்தைப் பருவத்தில் ஆண்-பெண் என்ற பாகுபாடு இன்றி குழந்தைகள், குழந்தைகளாக மட்டும்தான் வளர்ந்து கொண்டிருப்பார்கள். அதனால் பத்து வயதுவரை பெண்தன்மை கொண்ட குழந்தைகளை அடையாளம் காண்பது பெற்றோருக்கு சிரமம்தான். பத்து வயதுக்கு மேல் பெண் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவது, அழகுணர்ச்சி அதிகமாகி சிறுமிகள்போல் அழகுப்படுத்திக்கொள்வது, வண்ண வண்ண உடைகள் மீது ஈர்ப்பு கொள்வது, சிறுவர்களிடம் இருந்து விலகிக்கொண்டிருப்பது போன்றவை பெண்தன்மை கொண்ட ஆண்குழந்தைகளிடம் காணப்படும். பெண்மை குணங்கள் கொண்ட சில ஆண் குழந்தைகளுக்கு தங்களுடைய பாலினம் பற்றிய குழப்பம் இருக்காது. பெண்தன்மை இருந்தாலும் தன் பாலின அடையாளம் ஆண்தான் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
ஆனால் பெண்ணாக தன்னை அடையாளம் காணும் ஆண் குழந்தைக்கு அடுத்தடுத்த வருடங்களில் பேச்சு, நடை, உடல்மொழி போன்றவைகளிலும் பெண் தன்மை அதிகரித்துக்கொண்டிருக்கும். பதினான்கு வயது வாக்கில் ஆண், பெண் இருவருமே பருவமாற்றம் அடைகிறார்கள். பெண் வயதுக்கு வருவதும், ஆணுக்கு விந்து உற்பத்தி தொடங்குவதும் அப்போது நிகழ்கிறது.
ஒரு சிறுவன் திருநங்கையாக இருக்கும் பட்சத்தில் பருவ மாற்றத்தின் போது அவனுக்குள்ளும் சராசரியான ஆணுக்குரிய ஹார்மோன் சுரக்கத் தொடங்கிவிடும். உயிரணு உற்பத்தியும் தொடங்கும். அதே நேரத்தில், அதைவிட வேகமாக பெண்தன்மைக்கான குணாதிசயமும், செயல்பாடும் அவனுக்கும் வளரும். இதனால் பருவமாற்றத்தின்போது ஆண், பெண்ணை விட இவர்கள் அதிக மனக்குழப்பத்தை அடைவார்கள். இந்த மனக்குழப்ப அறிகுறியை பெற்றோர் எளிதாக உணர்ந்துகொள்ளலாம்.
இந்த காலகட்டத்தில் அவர்கள் பள்ளியில் படித்துக்கொண்டிந்தால். வீட்டில் அவர்களின் பழக்க வழக்க முரண்பாடுகளை பெற்றோர் புரிந்துகொள்வது போல், பள்ளிக்கூடத்தில் சக மாணவர்களில் சிலரும் அந்த முரண்பாட்டை கண்டறிந்து கேலி, கிண்டல் செய்யக்கூடும். சில ஆசிரியர்கள்கூட தண்டனை வழங்குவது மட்டுமின்றி `பாலியல்’ கண்ணோட்டத்தோடும் அணுகக்கூடும். இதனால் கோபம், எரிச்சல் தோன்றி, மன அழுத்தத்தின் உச்சத்திற்கு திருநங்கைகள் சென்றுவிட வாய்ப்புண்டு. பெற்றோரின் அரவணைப்பும், ஏற்றுக்கொள்ளளும் இத்தருணத்தில் குழந்தைகளுக்கு மிக மிக அவசியம்.
பாலியல் மாறுபாடு கொண்ட குழந்தைகளை பெற்ற பெற்றோர், `குடும்ப கவுரவம், கலாச்சாரம் என்ற பெயரில் உன் உணர்வுகளை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம். யார் உன்னை கொச்சைப்படுத்தினாலும் சும்மா விடமாட்டோம். உனக்கு எங்கே, எப்போது பிரச்சினை ஏற்பட்டாலும் எங்களிடம் சொல்’ என்று தன் குழந்தையை அரவணைக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடமும், சக மாணவர்களிடமும் பேசி யாரும் கேலி, கிண்டல் செய்யாத அளவிற்கு நன்றாகப் படிக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். படித்து முடிக்கும்வரை எல்லா திருநங்கைகளுக்குமே பள்ளி, கல்லூரிகளில் பெரும் பிரச்சினையாக இருப்பது `டாய்லெட்’. மாணவர்களுக்கு உரிய டாய்லெட்டையும் பயன்படுத்த முடியாது. மாணவிகளுக்குரிய டாய்லெட்டையும் பயன்படுத்த முடியாது. இதனால் படிப்பை திருநங்கைகள் துறக்கிறார்கள். அந்த நிலை ஏற்படாமல் இருக்க பெற்றோரே பள்ளிக்கூட நிர்வாகத்திடம் பேசி, ஆசிரியர்களின் டாய்லெட்டை பயன்படுத்த அனுமதி வாங்கித்தர வேண்டும்.
திருநங்கைகளுக்கு பள்ளிக் காலத்திலே காதல் பிரச்சினை தலைதூக்குகிறது. அதில் அவர்கள் காயமடையாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் பெற்றோருக்கு இருக்கிறது. 15 வயதுகளில் ஆண், பெண்களுக்கு ஏற்படுவது போன்ற இனக்கவர்ச்சி, செக்ஸ் ஈர்ப்பு திருநங்கைகளுக்கும் ஏற்படும். காதல் கொள்வார்கள். பெரும்பாலும் அப்படிப்பட்ட காதலில் விழும்போது ஆண்களால் `உபயோகப்படுத்தப்பட்டு’, காயப்படுத்தப்படுகிறார்கள். அப்போது அவர்களை பெற்றோர் புரிந்துகொண்டு நல்வழிப்படுத்தாவிட்டால், தனக்கு ஆறுதல் தரும் திருநங்கைகள் சமூகத்தை நோக்கி அவர்கள் நகரத் தொடங்கிவிடுவார்கள். அப்போதுதான் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதும், மும்பை போன்ற நகரங்களுக்கு செல்வதும் நிகழ்கிறது.
குடும்பத்தின் அரவணைப்பு கிடைக்காதபோது தங்கள் குடும்ப அந்தஸ்து, பணம், பொருள், ஊர், உறவு அத்தனையையும் புறந்தள்ளிவிட்டு அவர்கள் திருநங்கைகள் சமூகத்தோடு இணைந்துவிடுவார்கள். அங்கே அவர்கள் விரும்பியது போல் பெண் உடை அணிந்து கொண்டு, பெண் போல் வாழ வாய்ப்பு கிடைத்தாலும் வாழ்க்கைக்கு தேவையான பணத்துக்காக கடைகேட்டல் அல்லது பாலியல் தொழில் செய்வது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
அதைத் தொடர்ந்து தனக்கும் இருக்கும் பெண்மையை முழுமைப்படுத்த விரும்பி, அவர் சார்ந்திருக்கும் திருநங்கை குழுவினர் பயன்படுத்துவதுபோல் ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுதல், ஹார்மோன் ஊசிகளை செலுத்துதல் போன்றவைகளில் இறங்குவார்கள். ஒவ்வொருவர் சொல்லும் ஆலோசனையையும் கேட்டு வெவ்வேறு மாத்திரைகளை சாப்பிடுவதால் அவர்கள் உடல் நிலை வெகுவாக பாதிக்கும்.
இந்த மாதிரியான பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், பெற்றோர் முதலில் தங்கள் திருநங்கைக் குழந்தையை புரிந்துகொள்ள வேண்டும். `என் குழந்தை திருநங்கைதான் என்றாலும், எனக்கு அது குழந்தை. உலகத்திலே எனக்கு அந்த குழந்தைதான் பெரிது. அதை வளர்த்து, ஆளாக்கி உன்னத நிலையை அடைய வைப்பேன்..’ என்று தைரியமாக சொல்லவேண்டும். அதில் அவர்களுக்கு தயக்கங்களோ, தடுமாற்றங்களோ இருந்தால் மனநல நிபுணர்களிடம் கவுன்சலிங் பெறவேண்டும்.
10-12 வயதில் ஒரு சிறுவன் தன்னைப் போன்ற சிறுவர்கள் கூட்டத்தோடும், சிறுமி தன்னைப்போன்ற சிறுமிகள் கூட்டத்தோடும் இணைவார்கள். அந்த காலகட்டத்தில் தன்னை திருநங்கையாகப் புரிந்துகொள்கிறவர், தன்னைப் பெண்ணாக உணர்ந்து பெண் பக்கமாக சாய்கிறார். அப்போது குடும்பமும், சமூகமும் அவரைப் பார்த்து `நீ ஆண் அல்லவா.. ஏன் பெண்கள் பக்கள் சாய்கிறாய்?’ என்று கேட்கிறது.
திருநங்கை பெண்களோடு பழகி, பெண்களையே கூர்ந்து கவனிப்பதால், தன்னைவிட மூத்த பெண்கள் மேக்-அப் செய்துகொள்வதும், அணிகலன் அணிவதும், அழகழகாக உடைகள் உடுத்திக்கொள்வதும் அவர்களை ஈர்க்கிறது. அப்போது அவர்களுக்கும் இருக்கும் பெண்மை விழித்து அவர்களையும் அதுபோல் அலங்காரம் செய்துகொள்ளத் தூண்டுகிறது. திருநங்கையின் அந்த உணர்வுகளை பெற்றோரும், குடும்பத்தாரும் அப்போது அங்கீகரிக்க வேண்டும். எல்லா விஷயங்களையும் மனம் திறந்துபேச அனுமதிக்கவேண்டும். அப்படி பேசி, அவர்களுடைய உணர்வுகளை தெரிந்துகொண்டு, தங்களுடனே வைத்து பெற்றோரால் வளர்க்கப்பட்ட சில திருநங்கைகள் இப்போது உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். எக்காரணத்தைக் கொண்டும் திருநங்கையை ஆணாகக் கருதி, அவருக்கு இன்னொரு பெண்ணை திருமணம் செய்துவைத்துவிடக்கூடாது. அது மிகக்கொடுமையான செயல்.
திருநங்கைகளுக்கு இன்று வேலை கிடைப்பதில்லை. காரணம் அவர்களுக்கு முழுமையான கல்வி இல்லை. அந்த கல்வி கிடைக்காததற்கு காரணம் பெற்றோர் குடும்பத்தைவிட்டு அவர்களை வெளியேற்றிவிடுவதுதான். பெற்றோர் தங்களோடு திருநங்கைகளை வைத்து வளர்த்தால் அவர்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
திருநங்கைகள் பால்மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகுதான் பெண்ணாகி முழுமை பெறுவதாக கருதுகிறார்கள். உறுப்பை நீக்கியவர்தான் உயர்ந்தவர் என்ற கருத்தும் சில திருநங்கைகள் மத்தியில் இருக்கிறது. `என் மனது பெண்மையுடன் இருக்கிறது. அதனால் ஆண் உறுப்பை நீக்காவிட்டாலும் நான் பெண்தான்’ என்று கருதி ஆபரேஷன் எதுவும் செய்துகொள்ளாமல் சந்தோஷமாக வாழும் திருநங்கைகளும் இருக்கிறார்கள்.
திருநங்கைகளுக்கு உள்ள பிரச்னைகளை ஊடகங்கள் வாயிலாக நன்றாக அறிகிறோம். ஆனால் திருநம்பிகள் என்றழைக்கப்படும் பெண் உடலில் வாழுகின்ற ஆண்களின் துன்பம் சொல்லப்படாத சோகம். பெண் உடலுக்கு இழைக்கப்படும் அநீதி இந்த ஆண்களுக்கும் இழைக்கப்படுகிறது. திருநங்கைகள் ஆண் உடலில் அனுபவிக்கின்ற குழப்பங்களையும், துன்பங்களையும் திருநம்பிகள் பெண் உடலில் அனுபவிக்கிறார்கள். திருநம்பியை ஆணுக்கு திருமணம் செய்துவைப்பது மிகவும் துன்பகரமானது. பெற்றோர் இந்த தவறை ஒருக்காலும் செய்யக்கூடாது.
ஒரு திருநங்கையோ அல்லது திருநம்பியோ பால்மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ள விரும்பினால் அவர், ஆபரேஷனுக்கு முன்னால் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை `ஹாரி பெஞ்சமின் ஸ்டேன்டர்டு ஆப் கேர்’ என்ற நடத்தை விதிமுறை விளக்குகிறது.
அதன் முக்கிய ஐந்து அம்சங்கள்:
- முழுமையான மருத்துவ பரிசோதனை
- மனநல கவுன்சலிங்
- பெண் போல் மாற விரும்பும்போது, ஆபரேஷனுக்கு முன்பே அதுபோல் வாழ்ந்து, பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் அனுபவங்களைப் பெறுவது
- ஹார்மோன் சிகிச்சை
- அறுவை சிகிச்சை
இவை ஒன்றன்பின் ஒன்றாக செய்யப்படுகின்றன. சிலர் மனநல நிபுணரிடம் கவுன்சலிங் பெறும்போதே குழப்ப மனநிலையில் இருந்து விடுபட்டு தெளிவு பெற்றுவிடுகிறார்கள். திருநங்கையாக இருந்தால் சிலர் `தனக்கு பெண் உடை அணிவதில் மட்டும்தான் ஆசை இருக்கிறது. ஆபரேஷன் செய்து கொள்ள விருப்பம் இல்லை’ என்று ஒதுங்கிவிடுகிறார்கள். சிலர் பெண் உடை அணிந்து சமூகத்தில் வாழ்வு முறை அனுபவத்தை பெறும்போது உருவாகும் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல், தான் ஆண் உடையிலே வாழ்ந்து மீதி காலத்தை கழித்திடுவதாக சொல்வதுண்டு.
திருநம்பியாக இருந்தால் இதே மருத்துவ அணுகுமுறையில் ஆண் உடை அணிதல், ஆணாக வாழ்ந்து சமூகத்தில் வாழ்வு முறை அனுபவத்தை பெறும்போது உருவாகும் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும் என்ற திறனும், தைரியமும் அவசியம்.
முதல் மூன்று கட்டங்களையும் கடந்து தன்னை உணர்ந்து, தன் விருப்பங்களை உணர்ந்து, தனக்கு ஆபரேஷன் தேவை என்ற தெளிவான நிலைக்கு அவர்கள் வந்த பிறகு ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஹாரி பெஞ்சமின் குறிப்பிடுகிறார். திருனர்களுக்கு இந்த கவுன்சலிங் சிகிச்சை ஒரு வருடத்திற்கு மேல் நீளும். இவ்வாறு முறைப்படுத்தப்பட்டு செய்யப்படும் ஆபரேஷன்கள் மட்டுமே சிறந்தாக இருக்கும். இந்த காலகட்டங்களில் திருநங்கைக்கு தனது தாயாரின் அருகாமை மிக அவசியம்.
இந்த சமூகம் கருணை நிறைந்தது. பிராணிகள் மீதும் கருணை செலுத்துகிறது. சில பிராணிகளையும், மரங்களையும் வணங்குகிறது. அத்தகைய கருணை கொண்ட மனிதர்களுக்கு இயற்கையான தாம்பத்யத்தில் ஆண், பெண் குழந்தைகள் பிறப்பதுபோல்தான் திருனர்களும் பிறக்கிறார்கள். வீடுகளில் வளர்க்கும் பிராணிகளைக்கூட நன்றாக புரிந்து கொண்டு நம்மோடு அவைகளை வாழ அனுமதிக்கிறோம். அவைகளை பராமரித்து போற்றி, நாலு பேரிடம் அதைப் புகழ்ந்தும் பேசுகிறோம்.
அந்நியர்களை கூட அன்புடன் அரவணைக்கும் தேசம் நம் தேசம். அப்படிப்பட்ட நாம், நம் தசை, நம் ரத்தத்தில் நம்மோடு ஒருவராகப் பிறந்த குழந்தை திருனர்தன்மை கொண்டதாக இருந்தால் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள ஏன் தயங்குகிறோம்? “ஒரு தேசத்தின் மேன்மை, அதிலிருக்கும் எளியவர்கள் நடத்தப்படும் விதத்தை வைத்து மதிப்பிடப்படுகிறது” என்றார் அண்ணல் காந்தியடிகள். திருனர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். அவர்கள் நிலையில் நம்மை வைத்துப்பார்த்து அவர்களையும் முழுமையாக குடும்பத்தோடு இணைத்து, வளர்த்து, படிக்கவைத்து, ஆளாக்கி வாழ வழி வகை செய்து கொடுப்போம். அவர்களும் மிகச்சிறந்த ஆற்றலும், அளவு கடந்த அன்பும் கொண்டவர்கள். எதற்கும் லாயக்கற்றவர்கள் என்றோ, இதற்குத்தான் அவர்கள் லாயக்கானவர்கள் என்றோ முத்திரை குத்தாமல் எல்லோரையும் போல் அவர்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுப்போம். திருனர்கள் சமூகத்தில் இருந்தும் அறிஞர்களும், மேதைகளும், தலைவர்களும், பல்துறை நிபுணர்களும் நிறைய உருவாக வழி செய்வோம்.
மாறிவரும் காலச்சூழல் திருனர்கள் மதிப்போடு வாழ வழிசெய்கிறது. சமூகரீதியாகவும், சட்டரீதியாகவும் பல நல்மாற்றங்கள் நிகழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. திருனர்களுக்கு சட்டரீதியான, சமூகரீதியான, மருத்துவரீதியான பாதுகாப்பளிக்க வழிசெய்வோம்.
வெல்க மானுடம்!
நவம்பர் 20: திருனர்கள் நினைவு தினம்
[ தமிழாக்கம் : ஸ்ரீதர் சதாசிவன் ]
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 20 தேதி திருனர்கள் நினைவு தினம் (Transgender Day of Remembrance) அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் இயற்கை அல்லாத பிற வழிகளில் உயிரிழந்த நம் திருனர் சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள். 1998 ஆம் ஆண்டு ரீடா ஹெஸ்தர் ஒரு மெழுகுவர்த்தி அஞ்சலியாக துவங்கிய இந்த நாள், இன்று உலகில் பல நகரங்களில் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, நண்பர்களுடன் ஒரு பாட்லக் நிகழ்ச்சி, உடைகள் பரிமாறும் நிகழ்ச்சி மற்றும் என் நண்பர் பால் (Paul) ஏற்பாடு செய்திருக்கும் ஒரு திறந்த மேடை நிகழ்ச்சி என்று நான் இந்த நாளை கழிக்கப்போகிறேன். சில ஆண்டுகளாக, இது போன்ற நிகழ்ச்சிகளில் திருனர்களின் பெற்றோர்களும் பங்குகொண்டு, தங்களது குழந்தைகள் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள், இந்த சமுதாயத்தில் நடக்கவேண்டிய மாற்றங்கள் பற்றி பேசுவதை பார்த்திருக்கிறேன். அவர்களின் வருகை, அவர்கள் தங்கள் குழந்தைகள் மேல் காட்டும் அக்கறைக்கும், ஆதரவிற்கும் ஒரு அடையாளம்.
எனக்கு இந்த நாள் ஒரு உணர்ச்சிகரமான நாள். இந்த சமுதாயத்தின் கொடுமைகளுக்கு பலியாகி, ஈனர்களால் கொலை செய்யப்பட்டு நம்மை விட்டு பிரிந்த உயிர்களையும், மற்றும் இந்து சமுதாயம் அவர்கள் மீது காட்டும் வேற்றுமையையும், வெறுப்பையும் தாங்கமுடியாமல் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்ட உயிர்களையும் நினைவுகூரும்போழுது என் மனம் கனக்கிறது. அவர்களின் இறப்பின் பொழுது கூட, ஊடகங்களும், சட்ட ஒழுங்கு அதிகாரிகளும் திருனர்களின் உணர்வுகளை மதிக்காமல், அவர்கள் விரும்பி ஏற்கும் பாலடையாளத்தை சட்டை செய்யாமல், தவறான பாலை பயன்படுத்துவதை கண்டால் என்னால் கோபப்படாமல் இருக்கமுடியவில்லை. (அதாவது திருநங்கைகளை ஆண் என்றும், திருநம்பிகளை பெண் என்றும் தவறாக அடையாளப்படுத்துவது)
இறப்பில் கூட இந்த உயிர்களுக்கு மதிப்போ, மரியாதையோ கிடைப்பதில்லை. இத்தனை உயிர்கள் இறந்தாலும், இந்த சமுதாயம் திருனர்களை புரிந்துகொள்வதில்லை. இந்த சோகம் ஒருபுறம் இருந்தாலும், எதோ இன்று நான் உயிருடன் இருக்கிறேன் என்பதில் ஒரு சந்தோஷம். வாழக்கையில் பல தருணங்களில் நான் என் உயிரை துறக்கும் முடிவிற்கு வந்திருக்கிறேன். நல்லவேளை அதை செயல்படுத்தவில்லை. என்னுள் இருக்கும் மனவலிமைக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அந்த விதத்தில் நான் அதிர்ஷ்டசாலி.
இந்த ஆண்டு மிகவும் கடுமையாக இருந்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் தலை நகரான வாஷிங்க்டன் டீ.சீ யில் திருனர்களுக்கு எதிராக பல சம்பவங்கள், தொடர் கொலைகள், அதுவும் குறிப்பாக வெள்ளையர் அற்ற பிற சமூகங்களில்! இது மிகவும் வேதனைக்குரிய விஷயம். மெக்டோனல்ட் கடையில் ஒரு திருநங்கை, பணியாளர்களால் கண்மூடித்தனமாக அடிக்கப்பட்டார். கடையில் இருந்தவர்களும், பிற பணியாளர்களும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டும், நடந்ததை வீடியோ எடுத்துக்கொண்டும் இருந்தார்கள். என்ன கொடுமை! அதேபோல, நான் வசிக்கும் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில், எனது இல்லத்திற்கு அருகாமையில் ஒரு திருநங்கை ஈனர்களால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருவார தாமதத்திற்கு பிறகு கடைசியாக போலீஸ் அதை “ஹேட் கிரைம்ஸ்” (Hate crimes) என்று பதிவுசெய்தார்கள். இதுபோல கவனத்திற்கு வராத, தாக்குதல் நிகழ்வுகள் ஏராளம். கவனத்திற்கு கொண்டுவரப்பட்டால், அதை பதிவு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பதும் வெகு அபூர்வம் எனபது சோகமான உண்மை.
படம்: கடந்து மூன்று வருடத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட திருனர் கொலைகள் (Click to enlarge)
இணைப்புகள்:
அப்சானா, பீனா, முக்தி, சங்கீதா, சுனிதா: எங்களுக்கும் நீங்க ஹீரோ!
போன வாரம், மேற்கு வங்காளம் புருலியா மாவட்டத்தை சேர்ந்த இளம் மாணவிகளான அப்சானா காடுன், பீனா களிண்டி, முக்தி மஜ்ஹி, சங்கீதா புவரி, சுனிதா மகாடோ ஆகியோர் குழந்தை திருமணத்தை எதிர்த்ததால், ஜனாதிபதி பிரதீபா பாட்டிலால், கௌரவப்படுத்தபட்டார்கள் என்ற செய்தியை படித்திருப்பீர்கள். மேலும் விவரகளுக்கு கீழ்கண்ட இணைப்புகளை பார்க்கவும்.
இந்தியாவில் பலதரப்பட்ட சமூக மற்றும் பொருளாதார வர்கத்தை சேர்ந்த மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தினாரால், விருப்பமற்ற திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த திருமணங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியானாலும், குழந்தை திருமணங்களை போன்று நியாயமற்ற, நெறிகெட்ட திருமணங்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த திருமணங்களை எதிர்க்க, புருலியா மாவட்டத்தை சேர்ந்த இளம் மாணவிகளின் துணிச்சலும், வலிமையையும் தேவை என்றால் அது மிகையாகாது.
மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையில், இது போன்ற உங்கள் விருப்பத்திற்கு மாறான, கட்டாய திருமணங்களை எதிர்த்திருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் கதைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வரவேற்கிறோம்.
ஜூன் முழுவதும் சென்னையில் வானவில் விழா
“அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்?” – திருவள்ளுவர்
இந்த ஜூன் மாதம், சென்னை நகரம் நான்காவது முறையாக தனது வருடாந்திர வானவில் விழாவை நடத்தவிருக்கிறது. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை (Lesbian, Gay, Bisexual, Transgender) ஆதரிக்கவும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் எங்களின் பாலின மற்றும் பாலியல் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடுவதே ஒரு மாத காலம் நடைபெறவிருக்கும் இவ்விழாவின் நோக்கம்.
இந்தியாவில் முதல்முறையாக 1999 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் வானவில் விழா கொண்டாடப்பட்டது. தற்போது பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, கோயம்பத்தூர், தில்லி, கொல்கத்தா, மும்பை, பூனே, திருச்சூர் என்று ஒன்பது நகரங்களில் வானவில் விழா கொண்டாடப்படுகிறது.
பல நிறுவனங்களும், குழுமங்களும், அமைப்புகளும் ஒன்றாக இணைந்து, இந்த ஜூன் மாதம், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களுக்கான கலை விழா, மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் திரைப்பட விழா, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் பெற்றோர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி, எங்களை விட்டு பிரிந்த எம் சமூக நண்பர்களுக்கு நினைவஞ்சலி போன்ற பல நிகழ்சிகளை திட்டமிட்டுள்ளன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அமையவிருப்பது — சென்னை நகர வரலாற்றில் நான்காவது முறையாக மெரீனா கடற்கரையில் ஜூன் 24 ஆம் தேதி நடக்கவிருக்கும் சென்னை வானவில் பேரணி. இந்த நிகழ்சிகள் பற்றிய விவரங்களை http://chennaipride.net இணையதளத்தில் காணலாம்.
“அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்?” என்ற வள்ளுவரின் வாக்கியத்தை நாங்கள் இங்கு நினைவுகூர்கிறோம். ஆண்-பெண் உறவுகள் என்கிற ஏற்றுக்கொள்ளப்பட்ட விழைவுகளுக்கும், பாலின அடையாளங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே நிற்பவை எங்களுடைய காதல், அன்பு மற்றும் அடையாளங்கள். இவை சமூகத்தால், ‘இயற்கைக்குப் புறம்பானவை’ என்றும் ‘வெளிநாட்டு இறக்குமதிகள்’ என்றும் தூற்றப்படுகின்றன. ஆனால் இந்தக் காதல்களும், அடையாளங்களும் எங்களுக்கு இயற்கையானவை. நம்முடைய பண்பாட்டிலும் தொன்றுதொட்டு இருந்து வருபவை.
பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் பாலியல் மற்றும் பாலின வரையறைகளுக்குள் அடங்காதவர்கள் என்ற காரணத்தால், எங்களது மனித உரிமைகள் மறுக்கப்படுவது அநீதி.
இந்த வானவில் விழாவில் -
- ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர் நீதிமன்றம் நாஸ் பவுண்டேஷன் ஐ.பி.சி 377 ஐ எதிர்த்து தொடுத்திருந்த வழக்கில் “18 வயதை எட்டிய இருவர் விருப்பதுடன் ஈடுபடும் பாலியல் உறவு குற்றமல்ல” என்று தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் நிலைநிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். இந்தத் தீர்ப்பை நிலைநிறுத்தி, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின், அடிப்படை மனித உரிமைகளை பாதுகாத்து, அவர்களும் எல்லோரையும் போல, சுதந்திரமாகவும் கௌரவத்துடன் சம உரிமைகளோடும் வாழ உடனடியாக வழி செய்யுமாறு, இந்திய உச்ச நீதி மன்றத்தை வேண்டுகிறோம்.
- பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், உடல்நலம், சமூக சம உரிமை, புறக்கணிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவது போன்ற முக்கியமான அணுகுமுறைகளில், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை சேர்க்க பரிந்துரை செய்த இந்திய திட்டக் குழுவை நாங்கள் மனமாரப் பாராட்டுகிறோம். இந்த பரிந்துரைகளை செயல்பாடுகளாக மாற்றி, கல்வி, உடல்நலம், சட்டப் பாதுகாப்பு, சமூக வளம் போன்ற துறைகளில் எங்களை இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
- அரவானிகள் நல வாரியத்தின் திட்டங்களையும் பணிகளையும் மீண்டும் தொடங்கி அவற்றில் மேலும் முன்னேற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இந்த நல வாரியம் இந்தியாவில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் தமிழகத்தில் முதன் முதலில் துவங்கப்பட்ட ஒன்று. தமது பாலின வெளிப்பாட்டின் காரணமாகவோ, பாலியல்பின் அடிப்படையிலோ ஒதுக்குதலுக்கும் வன்முறைக்கும் உள்ளாகும் சிறுபான்மையினர் அனைவரையும் உள்ளடக்கும் விதத்தில் இந்த நல வாரியத்தின் பணிகளை அமைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
- சமீபத்தில் கேரளத்தில் கொலை செய்யப்பட்ட மரியா/ அனில் என்ற சமூக ஆர்வலர் உட்பட இந்தியாவில் பல்வேறு இடங்களில் கொடூரமான வன்முறைக்கு உட்படுத்தப்படும் பாலின- பாலியல் சிறுபான்மை மக்களை நாங்கள் இத்தருணத்தில் நினைவுகூர்ந்து அவர்களை இழந்தமைக்கான எங்களது துயரத்தை வெளிப்படுத்துகிறோம். மக்களின் பாதுகாப்பிற்கென உள்ள அமைப்புகளாகிய காவல் துறை, நீதித் துறை, குடும்பங்கள் போன்றவையே இத்தகைய வன்முறையை நிகழ்த்துகின்றன என்பது வருத்தத்திற்குரியது. இதற்கான தீர்வுகள் விரைவில் வேண்டும். கடந்த ஆண்டில் மட்டுமே பாலின மற்றும் பாலியல் சிறுபான்மையினர் பலர் உரிய காரணங்களின்றி அடிக்கடி கைது செய்யப்பட்டிருப்பதை அரசு மற்றும் பொது மக்களின் பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறோம்.
- எல்லோருக்கும் அவரவர் வசதிக்கேற்ற அவரவர் தேவைக்குரிய மருத்துவ வசதி கிடைக்கப்பெற வேண்டும். மருத்துவர்களும் மன நல நிபுணர்களும் மருந்துகள் மூலமோ அல்லது மின் அதிர்வு சிகிச்சை முறைகள் மூலமாகவோ வேறு அறிவியல் ஆதாரமற்ற முறைகள் வழியாகவோ பாலியல்பை மாற்றி அமைக்க முயல்வது தடுக்கப்பட வேண்டும். மாறுபட்ட பாலீர்ப்பையும் பாலின வெளிப்பாட்டையும் கொண்டவர்கள் நட்புணர்வு மிகவும் குறைந்த சமூதாயத்தில் வாழ வேண்டியுள்ளது. இதனால் எங்களது அன்றாட வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளா வேண்டியுள்ளா சவால்களையும் மன உளைச்சல்களையும் எதிர்கொள்வதற்கு எங்கள் குழுக்களின் ஆதரவும், நிபுணர்களின் ஆதரவும் எங்களுக்குத் தேவைப்படுகிறது.
- எங்களுடைய வெளிப்பாடுகளையும் விழைவுகளையும் இயற்கையானவை என புரிந்துகொள்ளுமாறு எங்களது குடும்பங்களைக் கேட்டுக்கொள்கிறொம். நடை உடை மூலமாகவோ, எங்களுடைய காதலர்களை நாங்கள் தேர்வு செய்யும் விதத்திலோ வெளிப்படும் எங்களுடைய தேர்வுகளை மதியுங்கள். ஆண்-பெண் திருமண உறவுகளில் எங்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஈடுபட எங்களைக் கட்டாயப்படுத்தாதீர்கள்.
- மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட மாணவர்களுக்கு ஒதுக்குதலும் வன்முறையும் அற்ற கல்விச் சூழலை ஏற்படுத்தித் தருமாறு கல்வி நிலையங்களைக் கேட்டுக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பாலின வெளிப்பாடும் பாலியல்பும் எத்தகையதாக இருப்பினும், அவர்களைத் துன்புறுத்துபவர்களின் செயல்பாடுகள் உரிய முறையில் கண்டிக்கப்படவும் தண்டிக்கப்படவும் வேண்டும்.
- எங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும் பொழுது நேர்மையுடனும், முழு தகவல்களுடனும் செயல்படுமாறு ஊடக நண்பர்களிடம் விண்ணப்பிக்கிறோம். எங்களுடைய வாழ்க்கைகள் இருட்டடிப்புச் செய்யப்படாமலும் கேலிச் சித்தரிப்புகள் ஆக்கப்படாமலும் இருக்கும் விதத்தில் எழுதுங்கள். சினிமாத் துறை எங்களை நகைப்புக்கு உரியவர்களாகவே சித்தரித்து வருகிறது. அதை மாற்றி உண்மைகளைப் பிரதிபலிக்குமாறு கேட்டுக்கொள்கிறொம்.
- அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு மத்தியில் வேறுபாடுகளை மதித்து நடத்தல் குறித்த விவாதங்களையும் பயிற்சிகளையும் ஏற்பாடு செய்யுமாறு இந்த நிறுவனங்களைக் கேட்டுக்கொள்கிறோம். நடத்தப்படும் விதம், வழங்கப்படும் சலுகைகள், பொதுவான அலுவலக சூழல் ஆகியவற்றில் பாலினம் மற்றும் பாலியல்பு குறித்த ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது.
- எங்களுடைய போராட்டங்களுக்குப் பலர் துணையாக இருந்து வருகிறார்கள். மற்ற சமூக/ மக்கள் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்கள்; தங்களுடைய அன்பையும் அரவணப்பையும் நெகிழச் செய்யும் விதங்களில் வெளிப்படுத்தியுள்ள பெற்றோர்கள்; ஆதரவுடனும் புரிதலுடனும் செயல்படும் ஆசிரியர்கள்; எங்களை மதிப்புடன் நடத்தி உகந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவ மற்றும் மனநலத் துறை நண்பர்கள்; தங்களது ஆதரவை வெளிபடையாகத் தெரிவித்திருக்கும் பிரபலங்கள்; எங்களுக்கு மதிப்பிட முடியாத உதவியை வழங்கும் வழக்கறிஞர்கள்; உண்மையுடனும் நுண்ணுணர்வுடனும் எங்கள் பிரச்சனைகளை உலகிற்குக் கொண்டு செல்லும் ஊடக நண்பர்கள் பலர் – அனைவருக்கும் இந்த நேரத்தில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
சென்னை வானவில் கூட்டணி
http://chennaipride.net
திருநங்கைகளும் ஊடகங்களும்
மனிதனும் ஊடகமும்
மனிதன் பிறந்தது முதல் அவனுடன் பயணித்த பல நிலைகளில் ஒன்றுத்தான் தொடர்புகள். ஒருவரை ஒருவர் உலகில் தொடர்புக்கொள்ள பல வழிகள் காலந்தொட்டே இருந்து வருகிறது. பண்டைய காலத்தில் புறாக்கள் மூலம் தொடர்புக்கொள்ள ஆரம்பித்து நவீன யுகமான தற்பொழுது இணையத்தளம் வரை மனித தொடர்புகள் தொடர்ந்து முன்னேறி போய்க் கொண்டுறிக்கிறது. இத்தகைய தொடர்புகளில் ஊடகத்தின் பங்கும் பாதிப்பும் அதன் தாக்கமும் மக்களிடையே அளவிடமுடியாது. ஊடகம் பல நல்ல நிகழ்வுகளையும் தீய நிகழ்வுகளையும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதில்லை. பத்திரிகை, வானொலி,தொலைக்காட்சி, இணையம் என்று பல்வேறு வடிவங்களில் மக்களிடையே ஒரு தொடர்பு கருவியாக ஊடுருவும் ஊடகங்கள் காலப்போக்கில் மக்களின் பழக்கவழக்கங்கள், குணாதிசயம்,பண்பாடு, கலாச்சாரம் போன்றவையை மாற்றக்கூடிய சக்தியாகவும் விளங்கியது. திருநங்கைகள் மீது ஊடகங்களின் தாக்கம் பெரும்பாலும் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு காரணியாகவே அமைந்துள்ளது.
திருநங்கை புரிதலில் ஊடகங்களின் பங்களிப்பு
மேற்கத்திய நாடுகளில் ஊடகங்கள் மாற்றுபாலின புரிதலை மக்களிடையே எடுத்துச்சென்று பெரிய மாறுதல்களை உருவாக்கியது. மேற்கத்திய நாடுகளின் பாலியல் புரிதல் வளம்பெறத் தொடங்கியதும் மாற்றுப் பாலினருக்கான அங்கீகாரமும் துளிர்விடத் தொடங்கியது. பெரும்பாலும் பத்திரிக்கை ஊடகங்களில் திருநங்கைகளை பற்றி மக்களிடையே புரிதலுக்கான முயற்சியை மற்ற ஊடகங்களை காட்டிலும் அதிகபடியான பங்கை பத்திரிக்கை மேற்கொண்டு வருகிறது. திருநங்கைகள் பற்றிய செய்திகளை பத்திரிகையில் வெளியிடுவது, அதாவது திருநங்கைகளின் கூட்டமைப்பின் செயல்பாடுகள், பேரணிகள், திருவிழாக்கள்,அழகிப்போட்டிகள், திருநங்கைகளின் பிரச்சனைகள் போன்றவைகளை தாங்கிய நிகழ்வுகள் அவ்வப்போது பத்திரிகையில் காணமுடிக்கிறது. வானொலியில் திருநங்கைகள் பற்றிய நிகழ்சிகளின் பங்கு மிகவும் குறைந்த அளவிலே உள்ளது.
தமிழ் திரைப்படங்களில் திருநங்கைகளின் அவல நிலை
தமிழில் வெளிவந்த பல திரைப்படங்கள் திருநங்கைகளை கேலிக்கான காட்சியாக மட்டுமே பயன்படுத்தி எங்களின் உணர்வுகளை காயப்படுத்தி அன்றுத்தொட்டு தன் கடமையாக சிறப்பாக செய்து வருகிறது. மீசை மழித்து முரட்டு ஆண்களை திருநங்கைகள் போல வேடமிட்டு நடிக்கவைத்து திருநங்கைகளை தோற்றத்தில் கூட அவமானம் படுத்திய இயக்குனர்கள் பலர் உண்டு. நகைச்சுவை என்கிற போர்வையில் அவமான பேச்சுக்கள், இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள், பாலியல் ரீதியான காட்சி அமைப்புகள் என்று திருநங்கைகளை திரைப்படங்கள் அலங்கோலம் படுத்தின.
பல திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் திருநங்கைகள் போல வேடமிட்ட ஆண்களை காணும் போது முகம் சுளிக்க வைக்கும். போக்கிரி, சிவகாசி, கட்டபொம்மன், துள்ளாத மனமும் துள்ளும், திருடா திருடி, பருத்தி வீரன், கில்லி, உள்ளம் கொள்ளை போகுதே, வேட்டையாடு விளையாடு, சில்லுன்னு ஒரு காதல், ஈரமான ரோஜாவே, லீலை, முரட்டுக்காளை போன்ற திரைப்படங்கள் திருநங்கைகளை கேவலமான முறையில் சித்தரித்துள்ளது. அந்த படங்களில் ஒரு நகைச்சுவை காட்சியிலோ இல்லை பாடல்களிலோ திருநங்கைகளை அவமதிக்கும் செயல்கள் அரங்கேறியுள்ளது. நகைச்சுவை என்கிற பெயரில் எங்களை நீங்கள் இழிவபடுதுவதை நிறுத்துங்கள். வேண்டாம் இனி திருநங்கைகளை அவமானபடுத்தும் வகையில் கேவலமான காட்சிகள் தமிழ் திரைப்படங்களில். தமிழ் திரையுலகமே திருநங்கைகளை இனி கண்ணியமான முறையில் திரைப்படங்களில் காட்டுங்கள். எங்களின் உணர்வுகளோடு உங்கள் வேடிக்கை வேண்டாம். இத்தகைய காட்சிகளை படத்தில் காணும் போது எங்கள் மனம் நோகுகிறது, மிகவும் தர்மசங்கடமான வருத்தமான சூழ்நிலை எங்களுக்கு ஏற்படுகிறது. உங்களுக்கு திருநங்கை போன்ற காட்சி அமைப்புகள் கொண்ட கதாபாத்திரம் வேண்டும் என்றால் திருநங்கைகளையே அந்த கதாபத்திரத்தில் நடிக்க வையுங்கள், எதற்கு அகோரி தோற்றம் உள்ள ஆண்களை திருநங்கைகள் போல வேடமிட்டு நடிக்க வைக்கிறீர்கள்? ஒரு தனிமனிதனையோ, சமூகத்தையோ, இனத்தையோ இழிவாக பேசுவதை சென்சார் அனுமதிக்க கூடாது என்பது விதி. திரைப்படங்களில் மிருகத்தை சித்திரவதை செய்வது கூட அனுமதிக்காத சென்சார் எப்படி ஒரு மனித இனத்தை திருநங்கைகளை இழிவாக பேச, மட்டமாக காட்சி அமைக்க அனுமதிக்கிறார்கள் என்று புரியவில்லை.
தமிழ் திரைப்படங்களில்மேன்மையான போக்கு
சில தமிழ் இயக்குனர்கள் திருநங்கைகளை கண்ணியமான முறையில் அருமையான கதாபாத்திரங்கள் கொடுத்து பெருமைபடுத்தி சிறப்பித்துள்ளனர்.அந்த வரிசையில் சில படங்கள்.
- மதக்கலவரத்தில் உள்ளவர்களை தடுத்துநிறுத்தி உயிரின் மதிப்பையும் உறவின் பெருமையையும் ஒரு திருநங்கை மூலம் கருத்தை பதிவு செய்த பாம்பே படத்தில் திரு.மணிரத்தினம் அவர்கள்
- திருநங்கையின் வலிமையை பெருமையை உணர்த்திய “காஞ்சனா” படத்தில் ராகவ லாரன்ஸ் அவர்கள்
- திருநங்கையின் அன்பையும் பரிவையும் சிறப்பையும் வாழ்வியல் முறையை அழகாக கூறிய”நர்த்தகி” படத்தில் புன்னகை பூ கீதா அவர்கள்
- திருநங்கையின் உணர்வுகள், பாலியல் தடுமாற்ற சூழ்நிலை உணர்த்திய “நவரசா” படத்தில் திரு.சந்தோஷ் சிவன் அவர்கள்
- தங்களை நம்பி வரும் காதல் ஜோடிகளை அரவணைத்து உதவி செய்து உயிரை விடும் திருநங்கையின் தியாகத்தை தெளிவுபடுத்திய “தெனாவட்டு” படத்தில் திரு.கதிர் அவர்கள்
- வீட்டில் இருந்து வெளியேற்றபட்ட திருநங்கை சமுதாயத்தில் முன்னேறி சாதித்த விதத்தை அழகுபடக் கூறிய “கருவறை பூக்கள்” படத்தில் திரு.சேவியர் IPS அவர்கள்
இவர்கள் அனைவருக்கும் திருநங்கைகள் சார்பாக நன்றியை தெரிவிக்கிறேன். திருநங்கைகளை சமமாக உணர்வுகளை உணர்ந்து மதித்து, நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து திருநங்கைகளை மேன்மைபடுத்திய அணைத்து இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் திருநங்கைகள் உலகம் நன்றியோடு நினைவில்கொள்ளும்.
- “நர்த்தகி” படத்தில் கல்கி சுப்ரமணியம்
- “தெனாவட்டு” படத்தில் ரேவதி
- “கருவறை பூக்கள்” படத்தில் லிவிங் ஸ்மைல் வித்யா
ஆகிய திருநங்கை சகோதரிகள் திரைப்படங்களில் தங்களுக்கு கொடுத்த கதாபத்திரத்தை அருமையாக திறம்பட செய்தனர். பல்வேறு சமூக காரணங்கள் மற்றும் மிருகங்கள் பாதுகாப்புக்கு குரல் கொடுக்கும் திரை நட்சித்திரங்கள், திருநங்கைகள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு குரல் கொடுத்தால் அந்த கருத்து மக்களுக்கு நல்ல விதமான முறையில் சென்று அடையும்.
இணையத்தில் திருநங்கைகள்
இணையத்தில் திருநங்கைகள் பற்றி பரவலான கட்டுரைகள், குறும்படங்கள், படக்காட்சிகள் வலைபதிவிலும், சமூக தளங்களான Facebook, Twitter, Youtube போன்ற தளங்களில் பார்க்கலாம். திருநங்கைகள் பற்றி பல இணையதளங்கள்களில் குறிப்பாக Sahodari.org, Orinam.net திருநங்கை பற்றிய செய்திகளை காணலாம். பல எழுத்தாளர்கள் திருநங்கைகள் பற்றி வலைபதிவிலும் தங்களின் கருத்தையும் ஆதரவையும் இணையம் மூலமும் வெளிபடுத்தியுள்ளனர்.
ஊடகத்துறை தோழர்களே உங்களால் முடியாதது எதுவுமில்லை!
நாட்டின் தலைவிதியை வரலாற்றை மாற்றும் சக்திகள் நீங்கள். மக்களிடையே அணைத்து தகவல்களையும் ஆராய்ந்து அலசி நடுநிலையாக உண்மையாக செய்திகளை கொண்டுச் சேர்க்கும் பணி உங்களுடையது. ஊடகத்தின் உதவிகள் இல்லாமல் எந்த ஒரு வெற்றியும் இன்றைய காலச்சுழ்நிலையில் அடைவது கடினம். ஒடுக்கப்பட்ட எங்களின் சமுதாயத்திற்கு அதரவாக குரல் கொடுங்கள், மக்களிடம் திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு புரிதலை ஏற்படுத்த முற்படுங்கள். திருநங்கைகள் பற்றிய எதிர்மறையான எண்ணங்கள் கொண்ட மனிதர்களின் மனதை மாற்ற, திருநங்கைகள் பற்றி மூட நம்பிக்கை அகல, அறிவு கண்ணை திறந்திட உங்களின் செயல்களால் ஊடகம் மூலமாக மாற்றம் ஏற்படுத்தமுடியும்.
ஊடகத்தில் திருநங்கைகளுக்கு வாய்ப்புக்கொடுங்கள்
மேற்கத்திய நாடுகளில் திருநங்கைகளின் நிகழ்ச்சி, பங்களிப்பு அதிகஅளவில் உள்ளது. இந்தியாவில் ஹிந்தி மொழிகளில் வரும் ஊடகங்களில் கூட கணிசமான திருநங்கைகளின் பங்களிப்பு உள்ளது. சகோதிரி கல்கி சுப்ரமணியம் அவர்கள் “சகோதிரி” என்கிற பத்திரிக்கை நடத்தி சிறப்பாக செயல்புரிந்து பத்திரிகை ஆசிரியாராக தன் திறமையை நிரூபிக்க செய்தார். ரோஸ் வெங்கடேசன் தொலைகாட்சி மற்றும் வானொலியில் தன் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். விஜய் தொலைகாட்சியில் வெளிவந்த “இப்படிக்கு ரோஸ்” கலைஞர் தொலைகாட்சியில் “இது ரோஸ் நேரம்” மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.”ரோசுடன் பேசுங்கள்” என்ற நிகழ்ச்சி மூலம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகவும் திகழ்ந்தார். சமீபத்தில் “Chennai In and Out Magazine” ஆசிரியர் திரு விஜயகுமார் அவர்கள் எனக்கு அவருடைய பத்திரிகையில் எழுத வாய்ப்புக்கொடுத்தார். “விடியலை தேடி திருநங்கைகள்” என்கிற தலைப்பில் நான் எழுதினேன். நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. திறமையான திருநங்கைகளுக்கு வாய்ப்பும் கொடுங்கள் எங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு குரலும் கொடுங்கள் ஊடக தோழர்களே!
உங்களின் கருத்தும் விமர்சனமும் வரவேற்கிறேன்.
ஆசிரியர் குறிப்பு:
இந்தக் கட்டுரை ஆயிஷாவின் வலைபதிவில் பிரசூரமானது. அவரது அனுமதியுடன் இங்கே பிரசூரிக்கப்பட்டுள்ளது.
பாலின சிறுபான்மையினரும் இந்திய நிறுவனங்களும்
மனிதனுடைய அன்றாட தேவைகளை சமாளிக்க பணம் வேண்டும். பணம் சம்பாதிக்க மனிதன் தேர்ந்தெடுத்தது வியாபாரம் செய்வது அல்லது ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணி செய்வது. இன்றைய உலகில் மனிதன் பலருடன் போட்டி போட்டு தன் திறமையை நிருபித்து வேலை பார்க்க வேண்டியுள்ளது. ஆண், பெண், எதிர்பாலீர்ப்பாளர்கள் என்று பெரும்பான்மையாக காணப்படும் பாலியல் அடையாளங்களையும் தாண்டி பாலின சிறுபான்மையினராக உள்ள நங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT) போன்றவர்கள் சமுதாயத்தில் தங்களின் வாழ்வுரிமையை, வாழ்வாதார நிலையை மேன்படுத்திக்கொள்ள, நிலைநிறுத்திக்கொள்ள கண்டிப்பாக வேலை தேவைப்படுகிறது. பாலின சிறுபான்மையின மக்கள் பலர் நல்ல கல்வி அறிவு இருந்தும், நல்ல திறமைகள் இருந்தும் பாலடையாளம் அல்லது பாலீர்ப்பு காரணமாக நிறுவனங்களில் வேலை மறுக்கப்படுகின்றனர். வளர்ந்த நாடுகளில் உள்ள பாலின சிறுபான்மையின மக்களுக்கு வேலை நிறுவனங்கள் ஆரோக்கியாமான அலுவலக சூழலை ஏற்படுத்தி, சமஉரிமைகளை வழங்குகின்றன.
அத்தகைய சூழலை இந்தியாவிலும் பல நிறுவனங்கள் செயல்படுத்த முன்வரவேண்டும். அமெரிக்காவில் வெளிவரும் பார்ச்யூன் (FORTUNE) இதழ் ஓவ்வொரு ஆண்டும் உலகில் பணிசெய்ய சிறந்த நூறு நிறுவனங்களை தேர்ந்தெடுக்கிறது. வேலை செய்ய ஏற்புடைய பல்வேறு சாதகமான காரணிகளை ஆராய்ந்து இந்த தர வரிசை தீர்மாணிக்கப்படுகிறது. உலகில் முதல் பத்து பணிசெய்ய சிறந்த நிறுவனங்கள் பாலின சிறுபான்மையின மக்களை பணியில் அமர்த்தி, அவர்களுக்கு சம உரிமையும் பாதுகாப்பும் அளித்து அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன. அந்த பத்து நிறுவனங்களில் ஒன்பது நிறுவனங்கள் பாலியல் அடிப்படையில் பாகுபாடு போன்றவற்றை தடை செய்துள்ளன. ஆறு நிறுவனங்கள் இனம் அடிப்படையில் பாகுபாட்டைத் தடை செய்துள்ளன. கூகிள், பி.சி.ஜி நிறுவனம், ஸ்.ஏ.ஸ் (SAS) என்று உலகில் தலைசிறந்த நிறுவனங்கள் பாலின சிறுபான்மையின மக்களுக்கு பணிகள் வழங்கி அவர்களின் வாழ்வாதார நிலையை முன்னேற்ற உதவி மற்ற நிறுவங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.
பாலின சிறுபான்மையினர் பலர் இந்தியாவில் இருந்தும், அவர்கள் தங்களின் பாலடையாளம் அல்லது பாலீர்ப்பு நிலையை மூடி மறைத்து பணி செய்யவேண்டியுள்ளது. அவர்களில் பலர் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கும், சமூகத்திற்கும் பயந்து பயந்து வேலை பார்கிறார்கள். இந்திய நிறுவனங்கள் பாலின சிறுபான்மையின மக்களை பணியில் அமர்த்தி தங்களின் வேறுபாடுகளை விரிவுப்படுத்த முன்வர வேண்டும். தங்களுடைய பாலடையாளம் அல்லது பாலீர்ப்பு நிலையை சுதந்திரமாக வெளிப்படுத்துவதன் மூலமாகவே, தங்களுடன் பணி செய்யும் சக ஊழியர்களுடன் திறந்தமனதுடன், ஊழியர்கள் பழக முடியும். அதன் விளைவாக உற்சாகத்துடன் உற்பத்திதிறன் மிக்கவராக பணியிடங்களில் செயல்ப்பட முடியும்.
தங்களின் பாலின அடையாளத்தை மறைத்து பணி செய்யும் ஊழியர்கள் அலுவலகத்தில் பாரபட்சமாக நடத்தபடுவதற்க்கும், பாலியல் துன்புறுத்தல், சுய மரியாதை இழப்பது, உற்சாகமின்மை, மன அழுத்தம், கவலை போன்றவைகளால் அதிகளவில் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய பாதிப்புகளால் அந்த ஊழியர்கள் வேலையில் விரக்தி, கவனமின்மை, கடமையில் இருந்து விலகல் போன்ற சிரமங்களுக்குள் சிக்க வாய்ப்பு உள்ளது. இந்திய நிறுவனங்களின் மேலாண்மை அதிகாரிகள் பாலின சிறுபான்மையின மக்களின் நிலையை கவனத்தில் கொண்டு, அவர்கள் திறம்பட வேலை செய்ய நல்ல சாதகமான சூழலை அமைத்துத்தர முன்வர வேண்டும். வளரும் நாடாக மாற உள்ள இந்தியா பாலின சிறுபான்மையின மக்களை கருத்தில் கொள்ளவில்லை என்றால் அதற்கு என்றும் வளர்ந்த நாடாக மாற வாய்ப்பு கிடைக்காது. பிற நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களை போல இந்தியாவில் உள்ள நிறுவனங்களும் பாலின சிறுபான்மையின மக்களை பணிகளில் அமர்த்த ஆர்வம் காட்ட வேண்டும். பணியிடங்களில் பாலின பாகுபாடுகள் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்.
ஹிலரி கிளிண்டன் ஐ. நா சபையில் வழங்கிய மனித உரிமைகள் பற்றிய உரை

Secretary Clinton, Dec 6th 2011, Geneva (Image: US Mission Geneva)
ஓரினம்.நெட் வெளியீடு
தமிழாக்கம்: ஸ்ரீதர் சதாசிவன்
உதவி: பூங்கோதை பாலசுப்பிரமணியன் & மதன்
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து கவிதா கிருஷ்ணன் தில்லியில் ஆற்றிய உரை
பாலியல் வன்முறையை எதிர்த்து டிசம்பர் 29 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மனித சங்கிலி
அன்புடையீர்,
வணக்கம்.
தில்லியில் சமீபத்தில் நடைபெற்ற கொடூரமான பாலியல் வன்கொடுமை, இதுபோன்ற வன்முறைகளை கண்டித்து நாடெங்கிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் தூண்டிவிட்டுள்ளது என்பது நீங்கள் அறிந்ததே. இது குறித்து, டிசம்பர் 29 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெறவுள்ள கண்டன போராட்டத்திற்கு வருமாறு உங்களை அழைக்கிறோம்.
தில்லியில் நடைபெற்ற சம்பவம் தனித்துவம் வாய்ந்தது அல்ல. அருவெருக்கத்தக்க செய்கைகள், கேவலமான வார்த்தைகள், உரசல்கள், தீண்டுதல்கள் ஆகியவற்றில் தொடங்கி, மிகவும் கேடுவிளைவிக்க கூடிய மற்றும் பாதகமான பல வகையான பாலியல் வன்முறைகளை குழந்தைகள், பெண்கள், மற்றும் பாலியல் ‘பிறழ்வு கொண்டோர்’ ["Sexually deviant"]என்று கருதப்படுபவர்கள் அன்றாடம் அனுபவிக்கிறார்கள். கண்டிக்கத்தக்க இந்த நடத்தைகள் தினசரி வழக்கமாகிவிட்டன. குடும்பத்தினர், அண்டை வீட்டார், சமூகத் தலைவர்கள், நீதி காக்கவேண்டிய அமைப்புகளான காவல்துறை மற்றும் இராணுவம் அனைவரும் பாலியல் வன்முறைகளை மேற்கொண்டதற்கு மறுக்க இயலாத ஆதாரங்கள் இருக்கின்றன.
பாலியல் வன்கொடுமை அதிகாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. கீழ்சாதியின் மேல் மேல்சாதி; சிறுபான்மையினர் மீது வலதுசாரி பெருபான்மையினர்; தங்களது அதிகாரத்துக்கு அடங்காத, பயம்விளைவிக்க கூடிய குடியினர் மீது அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தினர் – என்று பல நேரங்களில் இது அதிகாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. பாலியல் ரீதியாக வலு குறைந்த எந்தப் பிரிவினர் மீதும் நடத்தப்படலாம் என்றாலும், பெண்கள் மீது ஆண்கள் நடத்தும் பாலியல் வன்முறை பரவலாகக் காணப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பாலியல் வன்முறையை பற்றி கீழ்கண்ட கேள்விகளை கேட்கவேண்டியுள்ளது.
- ஆண்கள் இந்த அளவிற்கு வன்முறையுடனும், இழிவான நோக்கங்களுடனும் நடந்துகொள்ள நமது சுழலில் எந்த விஷயங்கள் காரணமாகின்றன? வளர்ச்சி, முன்னேற்றம் என்று நாம் கருதுபவை இயலாமையையும், வறுமையையும், குற்றங்கள் செய்வதையும் உருவாக்கிவிடுகிறதா?
- பாலியல் வன்முறை இழைப்பவர்கள் மனப் பிறழ்வு கொண்ட ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்களா? அல்லது அவர்களின் செய்கைகளுக்கு பின்னால் நாம் சிந்திக்க வேண்டிய மேலும் பல விஷயங்கள் உள்ளனவா? அவற்றிக்கு பின்னால் பெண்கள் மீதான வெறுப்பு, வெறி, அலட்சியம், மரியாதையின்மை இவற்றை வளர்க்கும் ஒரு பண்பாடு இருக்கிறதா?
- காவல்துறையும் நீதித்துறையும் தங்கள் பணியை சீராக செய்ய வேண்டும் என்று கோரும் நாம் இந்த விஷயத்தில் அதே அளவிலான பொறுப்புடைய மற்ற அமைப்புகளை கவனிக்காது விட்டுவிடுகிறோமா? மக்களுக்கு பதிலளிக்கத் தேவையில்லை என்ற ஒரு பண்பாடு நம் நாட்டில் நிலவுகிறது. உதாரணத்திற்கு, ஊடகங்களை எடுத்துக்கொள்ளலாம். விளம்பரங்கள், பரபரப்பான செய்திகள் ஆகியவற்றின் மூலம் எல்லா விதமான பாலியல் தூண்டுதல்களையும் ஊடகங்கள் ‘விற்பனை’ செய்கின்றன. இது தவிர, பண்பாடு என்னும் பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் நிகழ்ச்சிகளையும் வெளியிடுகின்றன. இவற்றை நாம் கவனிக்காது விட்டுவிடுகின்றோமா?
இப்படிக்கு,
மனித சங்கிலி ஒருங்கிணைப்புக் குழு
மேலும் தகவலுக்கு: சிவகுமார் – 9840699776 | அனிருத்தன் – 8939609670
RSVP on Facebook: HumanChainDec29Chennai
Thanks: Sneha Krishnan, V Geetha and Shri Sadasivan for draft and Tamil translation
தமிழ்நாடு வானவில் கூட்டணி, பாலியல் சிறுபானமையினரின் உரிமைகளை காக்கக் கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தும் பேரணி
பாலியல் சிறுபானமையினரின் உரிமைகளை காக்கக் கோரி ஜனவரி 11 ( 3-430 PM) அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் பேரணி.
தமிழகமெங்கும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் (Lesbians, Gays, Bisexuals, Transgenders), மற்றும் எல்லா சமூகங்ககளை சார்ந்தவர்களின் மனித உரிமைகள், சுகாதாரம் தொடர்பான துறைகளில் பணியாற்றும் அமைப்புகள் ஒன்றாக இணைந்து அமைத்துள்ள கூட்டணி, தமிழ்நாடு வானவில் கூட்டணி.
- மாநில அளவில் 377 பிரிவில் சட்ட திருத்தம் கொண்டுவந்து, 18 வயதிற்கு மேல் உள்ள இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் தனிமையில் நடக்கும் எந்த பால் சம்மந்தமான உறவையும், குற்றமாக்காமல் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். 1967 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்து திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தது போன்ற பல முற்போக்கான மாற்றங்களை பாரம்பரியமாக கொண்ட நம் தமிழ் நாட்டில், இந்த 377 சட்ட திருத்தம் இன்னொரு பெருமை சேர்க்கும் விஷயமாக கருதப்படும் என்பது மறுக்க முடியாதது.
- தேசிய அளவில், இந்திய அரசாங்கம், நாஸ் பவுண்டேஷன், வாய்சஸ் அகைன்ச்ட் 377, ஆகிய அமைப்புகள் சமர்ப்பித்துள்ள மறுபரிசீலனை விண்ணப்பங்களை, சாதகமாக பரிசீலித்து, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் கண்ணியத்தை காக்குமாறு உச்ச நீதி மன்றத்தை கேட்டுக் கொள்கிறோம்.
- சம உரிமைகள் கொண்ட முழு குடிமக்களாக எங்களை நடத்துமாறு எங்கள் குடும்பங்கள், கல்வி நிலையங்கள், பணி இடங்கள், அரசாங்கம், நம் தாய்நாடு, மற்றும் நம் சமுதாயம், ஆகியோரை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதீத வெறுப்பினாலும், அறியாமையாலும் எங்கள் மேல் தவறான அபிப்பராயங்களை கொண்டவர்களை, அவற்றைக் களைந்து, திறந்த மனத்துடன், சொந்த குடும்பத்திற்குள்ளேயே சிறுபான்மையான எங்கள் வாழ்வுகளையும், போராட்டங்களையும், புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும், பெண்கள் அமைப்புகள், தலித் அமைப்புகள், பாலியல் தொழிலாளர் அமைப்புகள் ஆகியபல முற்போக்கான அமைப்புகளுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அமைப்புகளுடன், எங்களுக்கு பொதுவாக அமைந்துள்ள சவால்களையும், உரிமை போராட்டங்களையும் நாங்கள் நன்கு உணர்வோம். இவர்களுடன் இணைந்து, எல்லோருடைய சமூக நீதிக்கும், சமத்துவத்திற்குமான எங்கள் போராட்டம், பன்மடங்கு உறுதியுடன் தொடரும், என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
Rally photos:
Media coverage:
முனைவர் பாப்பையாவின் மூர்கத்தனம்
Video: https://www.youtube.com/watch?v=etQ4yViPuyc&feature=youtu.be&t=41m50s
“மூர்க்கம்” – பொருள், மொழிபெயர்ப்புகள் மற்றும் பயன்பாடு
காலை பத்து மணிக்கு, முனைவர். பாப்பையா தலைமையில் மூர்க்கமன்றம்! தவறியும் பார்க்காதீர்!
அன்புள்ள முனைவர். சாலமன் பாப்பையா அவர்களுக்கு,
“டில்லி மாநகரத்திலே ஒரு பாலர் ஊர்வலங்களைப் பார்த்தீர்களா?” எனப் புலம்பி, என்னைப்போன்ற தன்பால் ஈர்ப்பு கொண்டோரை “ஒரு பாலர்” என்று அடையாளம் கொண்டதற்கு நன்றி. திருநங்கை, நங்கை, நம்பி, ஈரர் என்கிற எங்கள் அனைவரையும் ஒரு பாலர் எனும் சொல்லால் உலகத்தமிழர்கட்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி!
உங்களின் அந்த முதல் வரியைக் கேட்டதும் என் மனதில் ஓடிய கருத்துக்களை இங்கு பதிவுசெய்கின்றேன்.
1. சமுதாய மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட அறிஞர் அண்ணாவின் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்!’ எனும் உயர்ந்த கருத்தைத் தன்பால் ஈர்ப்பு கொண்டோரின் அடிப்படை உரிமை போராட்டத்திற்கு ஏற்றார் போல் மாற்றி, ‘ஒன்றே பால்! நாம் அனைவரும் ஓரினம்!’ எனும் தாரகமந்திரத்தைச் செதுக்க உதவியாய் இருந்தவர் என்று நாளைய சமுதாயம் உங்களைப் பற்றிப் பெருமையாய்ச் சொல்லக்கூடும்!
2. ஆண்மை, பெண்மை என்கிற பாலின இருமத்தை (gender binary) மட்டும் அல்லாமல், பால் இருமத்தையே (the notion that there are only two sexes) உடைத்து சாதனை புரிந்தமைக்கு நாளைய சமுதாயம் உங்களை என்றென்றும் போற்றும்!
உங்களுக்கான தனி ஒரு அரியாசனத்தை நான் கட்டிக்கொண்டிருக்கும் வேளையில், உங்களின் இரண்டாம் வரி, அங்கவையையும் சங்கவையையும் ‘பொங்கவைத்து’ கேலிப் பொருளாய் பயன்படுத்த (’பொங்கவை’க்க) உதவிப் புரிந்த தமிழ் அறிஞர் என்கிற பதக்கத்திற்கு அருகில் மற்றொரு பதக்கத்தைத் தைக்கிறது!
பால், பாலினம், பாலீர்ப்பு ஆகியவற்றின் நுணுக்கங்களை உணராமல் நீங்கள் பதிவு செய்த கருத்து, புரட்சியின் விளிம்பினைத் தொடுவது போல் தெரிந்தாலும், வக்கிரத்தின் ஆழத்திலே தான் சிக்கித்தவிக்கிறது. தமிழ் அறிஞராய் இருந்தும் “ஒரு பாலர்” என்ற பொருந்தா சொல்லாடலை நீங்கள் பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனக்குத் தெரிந்து ஓர் பாலர் மட்டுமே பங்கு கொள்ளும் ஊர்வலங்களுள் ஒன்று இயற்கை எய்தியவரின் இறுதி ஊர்வலம்! டில்லியில் நடந்த அந்த “ஒரு பாலர்” ஊர்வலம், மனித உரிமைகளின் இறுதி ஊர்வலமென பலர் கருதினாலும் அதனை நான், பாலீர்ப்பு மாறுபாடு (diversity of sexual orientation) பற்றிய அறியாமை, வெறுப்பு (homophobia) ஆகியவற்றின் இறுதி ஊர்வலமாய்க் காண்கிறேன்! உங்களின் ஆருயிர் தோழர்களாய் இருந்த அவை இரண்டும் (அவர்கள் இருவரும்) இறந்துப்பட்டது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கத்தான் செய்யும். நாங்கள் வருடாவருடம் அவற்றிக்கு திதி செய்வோம் என சூளுரைத்து உங்களுக்கு ‘ஆறுதலை’ அளிக்க விரும்புகிறோம்! டில்லியில் உலா வருவதாய் நீங்கள் எண்ணும் பாலியல் சிறுபான்மையினர் தமிழகம் எங்கும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இருப்பதை உங்களுக்கு உணர்த்த விரும்புகிறேன்!
மொழி, ஆடை, பழக்கங்கள் ஆகியவற்றில் மேற்கத்திய ஊடுருவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவது உங்கள் தனி கருத்து. ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்ற முதுமொழியில் எனது நம்பிக்கை இருந்தாலும், உங்களின் கருத்தினை நான் மதிக்கிறேன். மேற்கத்திய மொழிகளின் ஊடுருவலைக் கண்டு நீங்கள் அஞ்சும் அதே வேளையில், இந்தியாவில் பல மொழிகள் இருப்பினும் தமிழ் இதுநாள் வரையில் வாழ்ந்து, வளர்ந்து வருவதை நினைவில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது வரையில் உங்களின் பேச்சினைப் பொறுமையுடன் கேட்டு வந்திருப்பினும் நீங்கள் தன்பாலீர்ப்பை வெளிநாட்டு இறக்குமதி என்றும் நகரமயமாக்கலின் விளைவு என்றும் தட்டிக் கழிக்க விழைவதை வன்மையாக கண்டிக்கிறேன். ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பதற்கிணங்க உங்கள் சொல்லிலடங்கா அச்சம் கொஞ்சம் வரம்பு மீறிச் செல்வதை இங்கு நான் காண்கிறேன்! மொழி, கலாச்சாரம் ஆகியவற்றில் ஆராய்ச்சி மேற்கொண்ட உங்களுக்கு இந்த மண்ணின் தன்பாலீர்ப்பு வாசத்தைப் பற்றிய அறிமுகம் கூட இல்லாதது வேடிக்கையாய் இருக்கிறது. உங்களுக்கு போதனை சொல்லவோ, பாவ மன்னிப்பு கொடுக்கவோ எனக்கு நேரமில்லை!
நிகழ் காலத்து நிதர்சனம் பற்றிய தகவல்களை அறியாதவராய் நீங்கள் இருப்பதை நான் உணர்கிறேன்! எடுத்துக்காட்டிற்கு, தர்மபுரியிலும், தமிழக அரசியலிலும் குடும்பங்களும் உறவுகளும் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை மனதில் கொள்ளாமல் காதலையும், தனி மனித சுதந்திரத்தையும் இகழ்ந்து பேசும் நீங்கள், ஒரு படி மேலே சென்று இருவருக்கு இடையே மலரும் காதல், குடும்பத்தையும், திருமணத்தையும், உறவுகளையும் சிதறச்செய்யும் என குரலை உயர்த்தி கைத்தட்டல் பெறும் அதே வேளையில், ஆணாதிக்க சமுதாயத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறீர்கள்! பெரியாரும் பாரதியும் அரும்பாடு பட்டு மாற்றிய சமுதாயச் சிந்தனைகளை, ஏற்படுத்திய ஆண் பெண் சமத்துவத்தை வேரறுக்கும் வண்ணமாய் நீங்கள் செயல்பட்டாலும், உங்கள் எண்ணங்கள் நிறைவேறாமல் இருப்பதற்கு அமைதியான வழியில் எல்லா முயற்சிகளையும் முற்போக்கு வாதிகள் மேற்கொள்வார்கள் என ஆழமாக நம்புகிறேன்!
படித்த குடும்பத்து பெண்களை ‘எங்கெங்கோ எங்கெங்கோ போகுது’ என்று கூறி எள்ளி நகையாடுவதையும், பெண்கள் விவாகரத்து கேட்காமல் வீட்டோடு அடங்கி இருக்க வேண்டும் என்று நாகூசாமல் பேசுவதையும் ஒரு போதும் ஏற்க முடியாது!
தமிழ் நாட்டின் பெண்களையும். தன்பாலீர்ப்பு கொண்டோரையும் இந்த பட்டிமன்றம் மிகவும் காயப்படுத்தி உள்ளது! இது போன்ற கருத்துக்களை இனி பதிவு செய்வதைத் தவிர்ப்பதே நல்லது! உங்களோடு மேடையில் அமர்ந்திருந்த அறுவரும் தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்யாததால் அவர்களும் உங்களின் கருத்துக்களோடு உடன்பாடு இருப்பதாகவே நான் காண்கிறேன்! சமுதாய சமநிலையைக் குலைக்கும் வகையில், ஆணாதிக்க தோரணையிலும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டதற்காக நீங்கள் அனைவரும் உங்கள் மனசாட்சியின் கேள்விகட்கு பதில் சொல்லுங்கள். கருத்து நிலையில் மாற்றமோ/ மன்னிப்பு கோரும் பக்குவமோ வராத வரை உங்கள் எழுவரின் பொதுவுரைகளைப் புறக்கணிப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்! இது என் தனிப்பட்ட நிலைபாடாய் இருப்பினும் என் எண்ணங்கள் தமிழகத்தில் வாழும் பலரின் கருத்தினைப் பிரதிபலிக்கிறது என்று நான் நினைக்கிறேன்! பாரதியின் வேடிக்கை மனிதர்கள் இன்றும் உலா வருவதை எண்ணி வருத்தமடையும், சிறுபான்மை!
“தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையானபின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?”
- பாரதி
நன்றி: பூங்கோதை அம்மா (சரிபார்த்தல்/ பிழை திருத்தல்)
பிரிவு 377 குறித்த தீர்ப்பை மறுபரிசீலனை கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று அனுமதிக்குமா?
பிரிவு 377 குறித்த தீர்ப்பை மறுபரிசீலனை கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று அனுமதிக்குமா?
Reviewing Our Options (Vikram’s piece, translated from the English by Aniruddhan Vasudevan)
இன்று, ஜனவரி 28, 2014 ஆம் நாள் உச்ச நீதிமன்றம் கௌஷல் Vs. நாஸ் (பிரிவு 377) வழக்கில் நீதிபதி சிங்க்வி இயற்றிய அதிர்ச்சிக்கும் வெட்கத்துக்கும் உரிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்வது குறித்த தனது தீர்மானத்தை வழங்க உள்ளது.
உச்ச நீதிமன்றம் தான் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி எண்ணற்ற குரல்கள் இந்தியாவிலும் உலகெங்கிலும் எழுந்ததன் காரணனமாகவே இன்று மறுபரிசீலனை குறித்த மனுக்கள் நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்துள்ளன. பல மக்கள் குழுக்கள், அரசியல் கட்சிகள், சமய அமைப்புகள் மட்டுமின்றி இந்திய அரசும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்துக் குரல் எழுப்பியுள்ளன. நீதிபதி சிங்க்வி அவர்களின் தீர்ப்பை வன்மையாக்க் கண்டித்து இந்திய அரசு மறுபரிசீலனைக்கான மனுவையும் தாக்கல் செய்துள்ளது.
அரசின் இந்த மனு தவிர, இந்தியாவில் மாற்றுப் பாலியல்பு கொண்டோர் (LGBTQ) சமூகமும் நமது ஆதரவாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் ஏழு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் குறைபாடுகளையும், அது வெளிப்படுத்தும் தவறான புரிதல்களையும், பாகுபாட்டு மனப்பான்மையையும் சுட்டிக்காட்டும் விதத்தில் இந்த மனுக்கள் அமைந்துள்ளன. (இந்த மனுக்கள் குறித்த தகவல்களும், மறுபரிசீலனை செய்யப்படும் முறை குறித்த விவரங்களும் இங்கு: http://orinam.net/377/377-supreme-court-review-petition-process-explained/)
எண்ணற்ற நபர்களை ஒரே சமயத்தில் குற்றவாளிகளாக்கும் இந்தத் தீர்ப்பு விளைவிக்கக் கூடிய அபாயங்களை எடுத்துக் கூறும் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு சாட்சியங்களாக LGBTQ மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உறுதிமொழி ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, எச்.ஐ.வி தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களது பணியை எவ்வாறு பாதித்துள்ளது என்றும், காவல் துறையினர் அவர்களை நடத்தும் விதத்தையும் எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துள்ளனர். மனநல நிபுணர்கள் பலர், இந்தத் தீர்ப்பு பல LGBTQ நபர்களின் மன நலனை மோசமாக பாதித்துள்ளதை எடுத்துக்காட்டி வாக்குமூலங்கள் வழங்கியுள்ளனர். இவை தவிர, மாற்றுப் பாலியல் கொண்டோரின் பெற்றோர் பலர் தங்களது குழந்தைகள் மற்ற குடும்பத்தினரிடமிருந்தும், சமூகத்தில் பிறரிடமிருந்தும் சந்திக்கும் ஒதுக்குதலையும் புறக்கணிப்பையும் விளக்கியுள்ளனர்.
மறுபரிசீலனை கோரும் இந்த மனுக்களை தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கும் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக நமது சட்டக் குழுவும் அவர்களது உதவியாளர்களும் வியக்கத்தக்க விதத்தில் செயல்பட்டுள்ளனர். சமூகத்தின் நமக்கு ஆதரவாக எழுந்துள்ள குரல்களின் வலிமையும் இதற்குக் காரணம். LGBTQ மக்களின் உரிமைகளில் பொதுவாக ஈடுபாடு இல்லாதவர்களையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வாதமும் அதன் பாரபட்ச மன நிலையும் சலிப்படையச் செய்துள்ளன. இனிவரும் நிகழ்வுகள் எப்படி இருப்பினும் ஒன்று நிச்சயம்: இந்த மோசமான தீர்ப்பின் விளைவாக நமக்குப் பலரின் ஆதரவு கிட்டியுள்ளது.
உச்ச நீதிமன்றம் நம் குரல்களைக் கேட்கும் என்றும், இந்தத் தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதை ஏற்கும் என்றும் நம்பிக்கை கொள்வோம். பல நீதிபதிகளைக் கொண்ட குழுவை நியமித்து நீதிமன்றம் இதனைச் செயல்படுத்தலாம். அரசியல் சட்டத்தின் சம உரிமைக்கான கோட்பாடுகளை கேள்விக்குட்படுத்தும் தீர்ப்பாக இது இருப்பதால் இதற்கு தகுந்த கவனம் அளிக்க வேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பு நியாயமானதே.
இந்தத் தீர்ப்பு குறித்த தவறான புரிதல் ஒன்றை நாம் நீக்கிக் கொள்ள வேண்டும். சட்ட மாற்றத்திற்கான பொறுப்பு அரசுடையது என்று கூறி பொறுப்பை அரசிடம் வழங்கும் விதத்தில் இருப்பதாக பலர் எண்ணுகின்றனர். இது தவறு. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அவ்வாறு கூறவில்லை. இந்தத் தீர்ப்பினால் ஏமாற்றமடைவோர் வேண்டுமானால் நாடாளுமன்றத்தை அணுகி சட்டத்தை மாற்றக் கோரலாம் என்று அலட்சியத்துடன் கூறுகிறது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. நாடாளுமன்றத்தின் அதிகாரப் பிரிவினைகள் இன்று இருக்கும் நிலையில் இது நடக்காத காரியம் என்பது உச்ச நீதிமன்றம் அறிந்ததே. அது மட்டுமன்றி, எந்த ஒரு இந்தியனின், எந்த ஒரு சமூகக் குழுவின் (அது எவ்வளவு சிறிய குழுவாக இருப்பினும்) அடிப்படை உரிமைகளும் பெரும்பான்மை சமூகத்தால் நசுக்கப்படாமல் பாதுகாக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை. அந்த முக்கியமான கடமையிலிருந்து நீதிமன்றம் தவறியுள்ளது.
நம்முடைய வாதங்கள் வலுவாக இருப்பினும் உச்ச நீதிமன்றம் பொதுவாகத் தான் வழங்கிய தீர்ப்பை மாற்றிக் கொள்ள மிகவும் தயங்கும் என்பதே உண்மை. மறுபரிசீலனைக்கான வழிமுறை ஒன்று உள்ளது. எனினும், மிக அரிதான தருணங்களிலேயே அது ஏற்றுக்கொள்ளப் படுகிறது. தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளை அவர்கள் வழங்கிய தீர்ப்பு தவறானது என்றும், அதைக் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டியது அவசியம் என்றும் ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். அது எளிதான காரியமல்ல.
இந்தத் தீர்ப்பைப் பொறுத்த வரை, அதனை இயற்றிய நீதிபதி சிங்க்வி அவர்க்ளின் பணிக்காலம் முடிந்துவிட்ட்து. அவரது இட்த்தில் நீதிபதி தத்து அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார். நீதிபதி சிங்க்வி அவர்களுடன் இணைந்து தீர்ப்பு வழங்கிய நீதிபது முகோபாத்யாய் அவர்களுடன் இணைந்து நீதிபதி தத்து அவர்கள் மறுபரிசீலனை கோரும் மனுக்களை பரிசீலிப்பார்.
நீதிமன்றத்தில் வெளிப்படையாக இந்த மனுக்கள் கேட்கப்பட வேண்டும் என்று நாம் விண்ணப்பித்திருந்தோம். ஆனால் அது மறுக்கப்பட்டது. இன்று, செவ்வாய், 28 ஜனவரி 2014 அன்று மதியம் 12 மணியளவில் நடுவர்களது தனியறையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படும். மாலை 6.30 மணியளவில் அவர்களுடைய முடிவு அறிவிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வலையேற்றம் செய்யப்படும். அந்த முடிவைப் பொறுத்து நமது பதிலும் செயல்பாடும் அமையும்.
மறுபரிசீலனைக்கான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வழங்கப்பட்ட தீர்ப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்பதே நமது எதிர்பார்ப்பு. அவ்வாறு நிகழ்ந்தால் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்காட நாம் தயாராக வேண்டும். ஆனால் இம்முறை நமக்குக் கிட்டியுள்ள ஆதரவின் பலத்துடன்.
இன்னொரு சாத்தியம்: தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்படும் என்பதை ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆனால் வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்படாமல் போகலாம். அப்படி நிகழ்ந்தால் நமது பணி சற்று கடினமாகும். உச்ச நீதுமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் நாம் மிகுந்த அக்கறையுடன் ஆவணப்படுத்த வேண்டும்.
ஒருவேளை நீதிபதிகள் வழங்கப்பட்ட தீர்ப்பின் அ நீதியை உணர்ந்து அதனை தள்ளுபடி செய்யலாம். நீங்கள் கடவுள் நம்ப்பிக்கைக் கொண்டவரெனின் இவ்வாறு நிகழ வேண்டிக்கொள்ளுங்கள்!
மறுபரிசீலனை கோரும் மனுக்கள் முழுதுமாக நிராகரிக்கவும் படலாம். மீண்டும் விவாதங்களைத் தொடங்கி வழக்கை முழுமையாக நட்த்த்த் தயங்கலாம். அவர்கள் சமூகத்தில் எழுந்துள்ள கருத்து மாற்றங்களைப் பொருட்படுத்தாது போகலாம். கடைசியாக, இந்த நீதிபதிகளும் பாரபட்ச மனநிலை கொண்டவர்களாக இருக்கலாம்.
அப்படி நிகழ்ந்தாலும் அது நமது பயணத்தின் முடிவு அன்று. மேற்கொண்டு ஒரு மனுவைத் தாக்கல் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. அது ஒரு தனி நபருடைய மனுவாக இருக்கும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் தான் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய வாதத்தை முன்வைக்க வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாகவும் கூறி ஒரு தனி நபர் மனு தாக்கல் செய்யலாம். இத்தகைய மனுவும் மிக அரிதாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதற்கான சாத்தியங்கள் இருப்பினும் இதை யார் தாக்கல் செய்யலாம் என்ற முடிவை நாம் மிக கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். மிக வலுவான வாதங்களை முன்வைக்கும் மனுவாக அது இருக்க வேண்டும்.
இவை அனைத்தையும் தாண்டி பொதுச் சமூகம் இருக்கிறது. அங்கிருந்து நமக்குக் கிடைத்துள்ள ஆதரவை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில் நாம் நம்பிக்கை கொள்வோம். குறிப்பாக இளைஞர்களின் ஆதரவு நமக்குக் கிடைத்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. முற்போக்கு சிந்தனையுள்ள சமயக் குழுக்கள் மற்றும் தலைவர்கள் தெரிவித்துள்ள ஆதரவும் தெம்பளிக்கிறது. அதுவரை LGBTQ விஷயத்தில் ஆர்வம் கொண்டிராத அரசியல் தலைவர்களும் தனியார் அமைப்புகளும் வெளிப்படுத்தியுள்ள ஆதரவு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நம்மை “மிகச் சிறிய சிறுபான்மைக் குழு” என்று விவரித்ததைப் பொய்க்கச் செய்கிறது.
இந்த ஆதரவுகளை உள்வாங்கிக் கொண்டு நாம் இன்னமும் வலுவடைய வேண்டும். நம்மை எதிர்ப்பவர்கள் நம்புவது போல் நாம் இயற்கைக்குப் புறம்பான்வர்கள் அல்ல என்றும், நாமும் பிறரைப் போல் இந்தியர்களே என்றும், நமக்கும் சம உரிமைகள் பெறத் தகுதி உண்டு என்பதையும் நிச்சயம் நிலை நாட்டுவோம்.
இது நடக்கும் என்ற நம்பிக்கை நம்மில் இருக்கிறது. வேறு இடங்களில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது வரலாற்று உண்மை. அமெரிக்காவில் 1986ல் Bowers vs.Hardwick என்ற வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒருபாலீர்ப்பாளர்களைப் பாரபட்சமாக நடத்துவது சட்டப்படி குற்றமல்ல என்று அறிவித்தது. ஆனால், 17 ஆண்டுகள் கழித்து அந்த நீதிமன்றம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அந்த ஆண்டுகளில் சமூகம் மாற்றமடைந்திருந்தது. அதனை ஒட்டி நீதிமன்றமும் தன் நிலையை மாற்றிக் கொண்டது.
இன்று இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திற்கு அத்தகைய வாய்ப்பு கிட்டியுள்ளது. நீதிக்காக நம்மை காத்திருக்கச் செய்யாமல் தன்னுடைய நிலைப்பாட்டை அது மாற்றிக் கொள்ளும் என்று நம்புவோம். அவ்வாறு நிகழவில்லை எனினும் விரைவில் அது சமூகத்தின் மாற்றத்தையொட்டி தன் நிலையைத் திருத்திக்கொள்ளும் என்று நம்புவோம்.
மேலும் விவரங்களுக்கு: http://orinam.net/377/377-supreme-court-review-petition-process-explained/
and http://377.orinam.net
Original piece is at http://orinam.net/reviewing-our-options/
மூன்றாம் பாலின அங்கீகாரம்: வெற்றிக்குப்பின்னால் தமிழ் திருநங்கைகள்
ஆகஸ்ட் 14, 2010.
63வது இந்திய சுதந்திரதினத்திற்கு முந்தைய நாள்தான் இந்தியாவில் வாழுகின்ற திருநங்கைகளின் சட்டரீதியான அங்கீகாரத்திற்கான முதல் விதை விதைக்கப்பட்ட பொன்நாள். வித்திட்டப்பட்ட இடம் தமிழகத்தின் தலைநகரிலுள்ள மெட்ராஸ் ஜூடிஷியல் அகாடமி.
தமிழ்நாடு சமூக நலத்துறை, சென்னை உயர்நீதி மன்றம், Tamilnadu State Legal Services Authority, National Legal Services Authority மற்றும் Madras Judicial Academy ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்திய SEMINAR ON ISSUES RELATED TO TRANSGENDER COMMUNITY என்ற கருத்தரங்கம்தான் சட்ட வல்லுனர்களின் ஆதரவையும், புரிதலையும் பெற்று இன்று சட்ட அங்கீகாரம் கிடைத்ததற்கு துவக்கமாக அமைந்தது.
இந்நிகழ்வில் உச்சநீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி ஆல்டமாஸ் கபீர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி M.Y. இக்பால், ஸ்ரீசதாசிவன், அப்போதைய சமூகநல அமைச்சர் திருமதி.கீதா ஜீவன், சமூக நலத்துறையின் அப்போதைய இயக்குனர் திருமதி.நிர்மலா, காவல்துறை உயர் அதிகாரி அர்ச்சனா ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.`
இந்நிகழ்வில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் திருநங்கை சமூகத்தின் பிரச்னைகளை விரிவாக திருநங்கை கல்கி எடுத்துரைக்க அதற்கான தீர்வுகளை பிரியாபாபு எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் திருநங்கை நூர்ஜஹான், திருநங்கை செல்வி ஆகியோரும் நீதிபதிகள் முன்னிலையில் உரையாற்றினார். திருநங்கை நூரி அவர்களும் பேசினார்.
இந்நிகழ்வுதான் NALSA மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் திருநங்கைகளின் பிரச்னைகளை கொண்டு சென்ற முதல் முக்கிய நிகழ்வாகும்.
அதன்பிறகு ‘திருநர்களும், சட்டமும்’ (Transgender and Law) என்ற தேசிய அளவிலான முதல் கருத்தரங்கு பிப்ரவரி 04, 2011 அன்று புதுதில்லி விக்ஞான் பவனில் நடந்தது. திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை சட்ட ரீதியாக அங்கீகரிப்பது பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் தேசிய கருத்தரங்கு இதுதான். இககருத்தரங்கை Delhi Legal Services Authority மற்றும் United Nations Development Program உடன் இணைந்து National Legal Services Authority ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திருமிகு. ஆல்டமாஸ் கபீர் அவர்கள். தமிழகத்தில் நடந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக தேசிய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த கருத்தரங்காக இது அமைந்தது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து இருநூறுக்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகள் பங்கேற்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும் இது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆல்டமாஸ் கபீர், சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி M.Y. இக்பால், புதுதில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதி விக்ரஜீத் சென் ஆகியோர் முன்னிலை வகித்தனர். UNDPயின் இந்திய இயக்குனர் கைட்லி வைசென்னும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
தேசிய அளவில் திருநங்கை சமூகத்தின் பிரதிநிதிகளாக தென்னிந்தியாவிலிருந்து பிரியாபாபு மற்றும் கல்கி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். வடக்கிலிருந்து லக்ஷ்மி நாராயண் திரிபாதி, கவுரி சாவந்த் மற்றும் சபீனா பிரான்சிஸ் ஆகியோர் அழைக்கப்பட்டு பங்கேற்றனர்.
இத்தேசிய கருத்தரங்கின் முக்கிய நிகழ்வே திருநங்கைகள் நீதிபதிகள் முன்னிலையில் ஆற்றிய உரைதான். தொடக்க நிகழ்வு உரைகள், மற்றும் வரவேற்புரைக்குப்பிற்கு நீதிபதிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு இரு சபைகளில் அமரவைக்கப்பட்டனர். ஒரு சபையில் நீதிபதிகள் மத்தியில் திருநங்கைகள் கல்கி மற்றும் பிரியாபாபுவும், மற்றொரு சபையில் நீதிபதிகள் மத்தியில் லக்ஷ்மிநாராயண் திரிபாதி, கவுரி சாவந்த் மற்றும் சபீனா பிரான்சிஸ் ஆகியோரும் விரிவாக இந்தியாவில் திருநர்களின் சமூக, பொருளாதார பெரும்பின்னடைவையும், துன்பியல் வாழ்க்கையையும் ஆதாரங்களுடன் விரிவாக எடுத்துரைத்தனர். வழக்கறிஞர் லயா மெஹ்தினி, டாக்டர் வெங்கடேஷ் சக்ரபாணி, எர்னெஸ்ட் நரோனா, சமூக ஆர்வலர் சொனாலி மெஹ்தா ஆகியோரும் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள State Legal Services Authority அமைப்புகள் இத்தகைய நிகழ்வுகளை நடத்தின.
திருநங்கை பிரியாபாபு Delhi Legal Services Authority நடத்திய நிகழ்விலும், சட்டீஸ்கர் மாநிலத்தின் ராய்சூரில் நடந்த நிகழ்விலும், Tamilnadu Legal Services Authority நடத்திய இன்னொரு நிகழ்விலும், பங்கேற்று மாற்றுப்பாலினத்தவரின் உரிமைகளை சட்ட ரீதியாக அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
திருநங்கை கல்கி Maharashtra State Legal Services Authority மற்றும் Article 39 அமைப்புகள் மும்பையில் நடத்திய நிகழ்விலும், அஸ்ஸாமிலுள்ள கவுகாத்தி பல்கலைக்கழகத்திலும், மத்திய பிரதேச மாநிலம் போபாலிலுள்ள Indian Judicial Academy யிலும், ஹரியானாவிலுள்ள Jindal Global School of Lawவிலும் பங்கேற்று மாற்றுப்பாலினத்தவரின் இன்றைய வாழ்வுநிலை பற்றியும், சட்ட அங்கீகாரத்தின் தேவைபற்றியும் உரையாற்றினார்.
திருநங்கை ஜீவா ராய்ச்சூரில் நடந்த நிகழ்விலும் ஹைதராபாத்தில் நடந்த சட்ட நிகழ்விலும், திருநங்கை ஆல்கா மற்றும் பாரதி கண்ணம்மா ஆகியோர் பல்வேறு சட்ட நிகழ்வுகளிலும், மாவட்ட அளவிலான நிகழ்வுகளில் கோவையில் சங்கீதாவும், திருச்சியில் காஜோலும், தூத்துக்குடியில் விஜியும் நீதிபதிகள் மத்தியில் திருநங்கைகளின் துன்பியல் வாழ்க்கையை நீதிபதிகளிடம் முறையிட்டார்கள். இதுபோல பல மாநிலங்களின் திருநங்கை பிரதிநிதிகள் பல்வேறு சட்ட கருத்தரங்கங்களில் பங்கேற்று தங்கள் வாழ்க்கை சிக்கல்களை, சட்ட அங்கீகாரத்தின் முக்கியத்துவத்தை நீதிபதிகள் முன்னிலையில் எடுத்துரைத்தனர். கர்நாடகாவில் திருநங்கை அக்காய், புதுதில்லியில் சீத்தா மற்றும் ருத்ராணி செட்ரி, மேற்கு வங்காளத்தில் அமிதாவா சர்கார் ஆகியோரின் பணிகள் குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் தொடர்ச்சியாகத்தான் NALSA (National Legal Services Authority) இந்திய உச்சநீதி மன்றத்தில் திருநர்களுக்கு சமூக நீதிகேட்டு 2012ல் வழக்கு தொடுத்தது. வழக்குத்தொடுத்து ஒன்றைரை ஆண்டுகளுக்குப்பின் ஏப்ரல் 15, 2014 அன்று தமிழக திருநங்கைகள் தினத்தன்று திருநங்கைகளின் பாலின அடையாளத்தையும் உரிமைகளையும் அங்கீகரிக்கிற வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்பின் பின்னணியாகும். நம்நாட்டிலுள்ள சாதாரண எளிய திருநங்கைகளின் உழைப்பும், அளப்பறிய பணிகளும்தான் பெருமளவில் இத்தீர்ப்பின் காரணகர்த்தாவாக இருந்திருக்கிறது என்பதும், அதிலும் தமிழக திருநங்கைகள்தான் போராட்டக்களத்தில் பெரும்பங்கு வகித்தனர் என்பதும் மறுக்கமுடியாத பெருமைக்குரிய உண்மையாகும்.
REFERENCES:
August 14, 2010
Tamilnadu Seminar:
http://www.thehindu.com/news/national/article1159795.ece
http://www.deccanherald.com/content/135025/judges-favour-law-social-acceptance.html
http://timesofindia.indiatimes.com/city/chennai/Jurists-call-for-laws-quota-to-ensure-transgenders-rights/articleshow/6312542.cms?referral=PM
http://www.dnaindia.com/india/report-govt-should-enact-law-to-protect-transgenders-rights-experts-1423384
Feb 4, 2011
National Seminar:
http://www.thehindu.com/news/national/article1159795.ece
http://www.deccanherald.com/content/135025/judges-favour-law-social-acceptance.html
District seminars
http://www.hindu.com/2011/01/28/stories/2011012853510600.htm
நாடாளுமன்றத்தை நோக்கி …
மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா? –படைப்புகளை வரவேற்கிறோம்
பின்னனி:
ஓரினம் – சென்னையிலிருந்து செயல்படும், LGBTQI மற்றும் அனைத்து மாற்று பாலின நண்பர்களின் கூட்டமைப்பு.
ஓரினத்தின் உறுப்பினர்களுக்கும், செயல்பாட்டாளர்களுக்கும் பெரும்பான்மையில் திருமணம் குறித்தான பார்வை பலவிதமாகவும், மாறுபட்டதாகவும் உள்ளது. கட்டாயத் திருமணங்களின் கொடுங்கோன்மையாலும், பெண்களையும் மற்ற பாலினங்களையும் ஆணாதிக்க ஏற்றத்தாழ்வுகளை கொண்டு திருமண அமைப்பு ஒடுக்குவதையும் எதிர்த்து சிலர் திருமணம் என்னும் கட்டமைப்பிலிருந்து முற்றிலுமாக வெளியே நிற்கின்றனர். இன்னும் சிலர் (ஓர்பாலீர்ப்பாளர்கள், ஓர்பாலீர்ப்பாளர்கள் அல்லாதோர்) திருமணக் கட்டமைப்பை தேர்ந்தெடுத்து அது ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒன்றாக அமைத்துக் கொள்ள தொடர்ந்து முயற்சிக்கின்றனர். இருப்பினும் ஒரு குழுவாக எங்களின் கொள்கைகளை மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, திருமணம் செய்து கொண்ட மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவர்களுக்கும், அவர்களின் துணைகளுக்கும் ஆதரவு அளிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். இதன் விழைவு தான் ‘மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா?’ எனும் இந்த திட்டம்
அடிப்படைக் கோட்டுபாடு:
தெற்கு ஆசியர்களுக்கிடையே இருக்கும் கட்டாய எதிர்பாலீர்ப்பு கலாச்சாரம் தனித்துவம் கொண்டதாகவும், அதே நேரம் தன்னளவில் ஒத்த தன்மையுடையதாகவும் உள்ளது. திருமணம் (எதிர்பால்) என்பது மகன் பெற்றோர்களுக்கு செய்யும் கடமை என்றும், திருமணமாகாத பெண் தோல்வி அடைந்தவள், பெற்றோற்களுக்கு பாரம் என்றும் ஆசிய மனங்களில் பதிந்து கிடக்கிறது. இதன் விளைவாய் மாற்று பாலினத்தோருக்கும், திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கும், பெற்றோர்களின் ஆசையை பூர்த்தி செய்வதிலும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கை வாழ்வது என்ற இரண்டிற்கும் நடுவே சிக்கி தவிக்கினறனர்.
பொதுவாக எங்களிடம் சொல்லப்பட்டது, நம்பிகள் (gay) பெற்றோர்களின் அழுத்தத்தை தாங்க முடியாமல் ,அவர்களின் பாலீர்ப்பின் சுயத்தை மறைத்து பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றனர். இருப்பினும் திருமணமான மாறுபட்ட பாலீர்ப்பாளர்களும், நம்பி (gay), நங்கைகளும் (lesbians) எதிர்கொள்கிற பிரச்சனைகள் பலவிதமானது.
நங்கைகளுக்கும், இருபாலினர்களுக்குமம் (cis people) திருமணத்திற்கான சமுக அழுத்தங்கள் உள்ளது. ஆயினும் கூட நம்பிகள் சந்திக்கும் பிரச்சனைகள் வேறுபட்டது. பாலாதிக்க உறவுமுறைகளின் அமைப்பில் எதிர்பாலீர்பாளர்களான திருநங்கைகள், திருநம்பிகளுக்கு திருமண அழுத்தம் என்பது அவர்களின் பாலீர்ப்பு மட்டுமல்ல, அவர்களின் பால் அடையாளத்தையும் நிராகரிப்பதாக இருக்கும்.
மேலும் திருமணக் கட்டமைப்புக்குள் நுழையும் எல்லா எதிர்பாலீனத்துருக்கும் குடும்ப அழுத்தம் மட்டும் காரணமில்லை. நம்பியாக இருப்பதும், எதிர்பாலீர்ப்பாளராகவும் இருப்பது இரு துருவங்கள் அல்ல. மாறுபட்ட பாலீர்ப்பாளர்களும் மற்ற பாலினத்தரால் வேறு வேறு கோணங்களில் ஈர்க்கப் படவே செய்கின்றனர். ஒரு சிலர் தங்களின் இருபால் பாலீர்ப்பை முழுவதுமாக முன்னதாகவே தெரிவித்து வேறொரு பாலீனத்தரை திருமணம் செய்வதும் உண்டு.
ஆனாலும் பெரும்பான்மையில் எதிர் பாலீனத்தாரோடு உறவில் இருக்கும் போது, தங்களின் ஓர்பால் ஈர்ப்புத்தன்மையை பின்னர் அறிந்து கொள்ளும் சூழ்நிலைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேநேரம் ஒரு சிலர் திருமண வாழ்க்கையின் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு தங்கள் அடையாளங்களை தன் துணைக்கு அறிவிக்கின்றனர்.
கடந்த பத்தாண்டு காலங்களில் பல்வேறு நபர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் ஓரினத்தை தொடர்பு கொண்டனர்,
- ஓர்பால் ஈர்ப்பு கொண்டவர்களை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தும் பெற்றோர்களை எதிர்கொள்வதற்காக
- வேறு பாலீனரத்தோடு உறவில் இருப்பவர்கள், தங்கள் கணவன்/ மனைவியை விட்டு வெளியேறுவதற்கான வழிகாட்டுதலுக்காக
- எதிர் பாலீனரத்தோடு உறவில் இருக்கும் அதே சமயத்தில் ஒத்த பாலினரத்தோடும் ஈர்ப்பு ஏற்படும் சமயங்களில்
- திருனர் மற்றும் திருநங்கைகள், திருநங்கை/திருநம்பிகள் அல்லாதவர்களுக்கு விருப்பம் இல்லாத போதிலும் திருமணம் செய்ய சொல்லி கட்டாயபடுத்தப்படும் போது
- எதிர்பாலினத்தனரின் ஆடைகளை அணியும் திருனர் அல்லாத எதிர்பாலீர்ப்பாளர்கள் தங்களின் இயல்பை ஏற்று கொண்ட பெண்ணை திருமணம் செய்ய விருப்பப்படும் போது
- ஆண் பெண் தம்பதியர்களாக இருப்பவர்களில் யாரோ ஒருவர் அல்லது இருவருமே ஒருவர் தங்களின் மாற்றுப்பாலீர்ப்பு தன்மையை பற்றி முழு ஒப்புதலுடன் பகிர்ந்து கொள்ள விருப்பப்படும் போது
சூழ்நிலைகள் இப்படியானதாக இருக்க, எதிர்பாலினத்தோரை திருமணம் செய்து கொண்ட நம்பி/ நங்கை/ இருபாலீர்ப்பாளர்கள் , திருநங்கை, திருநம்பிகளும் அவர்களின் துணையாளர்களுக்கும் பாதுகாப்பான ஆதரவான, முன்முடிவுகளற்ற ஒரு சூழலை இந்தியாவில் உருவாக்குவதற்கான முதல் படியாக ஒரினம் சார்பாக திருமண பிரச்சனைகளை முன்நிறுத்தும் கட்டுரைகள், கதைகள், நேர்காணல்கள், கவிதைகளை சேகரிக்க முடிவு செய்துள்ளோம்.
அழைப்பு:
வேற்றுபாலினத்தோரை திருமணம் செய்து கொண்ட நம்பி, நங்கை, இருபாலீர்பாளர்கள் , திருநங்கை, திருநம்பிகள் குறித்தான மற்றும் கட்டாய திருமணங்கள் குறித்தான ஆக்கங்கள் தமிழ், ஆங்கிலம் என்று இரு மொழிகளிலும் வரவேற்கப்படுகின்றன. மேலும் திருமணமான மாற்றுபாலினத்தவருடன் மேற்க்கொள்ளும் படைப்புகள் வரவேற்க்கபடுகின்றன.
தொடர்புகொள்ள:
உங்கள் படைப்புக்களை orinamwebber@gmail.com அனுப்பி வைக்கவும். புனைப்பெயர் கொண்டும் அனுப்பலாம்.உங்கள் படைப்புக்களை ஒட்டி முழு உதவியும் நம்பிக்கையும் தருவதற்கான நம்பகத்தன்மையான ஆசிரியர்கள் எங்கள் குழுவில் உள்ளனர் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
சொல்வதற்கு ஒன்றுமில்லை
கடந்த அக்டோபர் 31-ம் தேதி “ஜீ தமிழ் தொலைக்காட்சியில்” லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது.
மும்தாஜ் மற்றும் கலையரசி எனும் இரண்டு நபர்கள். பெரிய அளவில் படிப்போ , உலக அறிவோ இல்லாத இரண்டு நபர்கள். மெக்காலே (Macaulay) பிரபுவைப் பற்றியோ இந்தியத் தண்டனைச் சட்டத் தொகுப்பு 377-ஐப் பற்றியோ, அந்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள் பற்றி எதுவுமே அறியாத இரண்டு நபர்கள். ஓர்பால் ஈர்ப்பு பற்றியோ, ஓர்பால் ஈர்ப்பாளர்களின் உரிமைகள் பற்றியோ எந்தத் தெளிவானக் கருத்துமே இல்லாத இரண்டு நபர்கள்.
ஆனால் அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட காதலிற்காகவும், அது தொடர்பான பிரச்சனைகளை சரி செய்வதற்காகவும் ஒரு புதுவிதமான போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். போராட்டங்களைப் பற்றிய அறிவிப்புகளுக்காகவும், குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் மீது கண்டனங்கள் தெரிவிப்பதற்காகவும் ஊடகங்களை அணுகிக் கொண்டிருந்த பாலியல் சிறுபான்மையினர் சமூகத்தில் இருந்து இரண்டு பெண்கள் தங்கள் சொந்த வாழ்க்கைக்காக ஊடகங்களை நாடியிருக்கிறார்கள்.
அந்த பெண்களின் தனிப்பட்ட வாழ்க்க்கையைப் பற்றி எந்தக் கருத்துக்களும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனாலும் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையேயான காதலையும், திருமணங்களையும் மட்டுமே அங்கீகரிக்கும் ஒரு சமூகத்தில் தங்களுடைய காதலையும், தங்களுடைய பாலியலையும், தங்களுடைய சிக்கல்களையும் வெளிப்படையாக, மிக மிக இயல்பான ஒன்றாக அந்தப் பெண்கள் பேசியதன் மூலம் அந்த பெண்கள் தாங்கள் இயற்கைக்குப் புறம்பானவர்கள் அல்ல என்பதை உணர்த்தி இருக்கிறார்கள்.
ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கையோ (Tim Cook), எலன் பேஜ்ஜையோ (Ellan Page) அல்லது எல்லன் டி-ஜினர்ஸையோ (Ellan DeGeneres) உதாரணம் காட்டாமல், பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த சாதாரண வேலை பார்க்கும் இரு சிறுநகரப் பெண்கள் “ஓர்பாலீர்ப்பு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று” என்ற கருத்தை உடைத்திருக்கிறார்கள்.
ஒரு மணிநேரத்தில் பலரின் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் ஆதரவை நாடியதன் மூலம், தங்களுக்கான ஆதரவு சரியான இடத்திலிருந்து கிடைக்கவில்லை என்று உணர்த்தியிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் செய்ய வேண்டியது என்ன?
தங்களுடைய பாலினம் என்ன, அதற்கு வழங்கப்படும் உரிய சொற்கள் என்ன என்பது கூட தெரியாத , சொந்த வாழ்க்கையில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் அந்தப் பெண்களுக்கு தேவையான ஆலோசனைகளையோ வழிகாட்டுதலையோ முதலில் வழங்க வேண்டும்.
அடுத்து அனைவருக்கும் நேரம் இருக்கும் ஒரு வார இறுதியில் ஏதேனும் உணவு விடுதிகளில் சந்தித்து உரிமைகளையும், போராட்டங்களையும் பற்றிப் பேசி கலைந்து செல்வதை விட்டு, எங்கு உண்மையான தேவைகள் இருக்கிறதோ அங்கு களப்பணியாற்றத் தொடங்க வேண்டும்.
தங்களுடைய பாலியல் அடையாளம் என்ன? தங்களுடைய பாலின அடையாளம் என்ன? தாங்கள் பாலியல் சிறுபான்மையினரா? அல்லது பாலினச் சிறுபான்மையினரா? தாங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் இயற்கையானதா? தங்களுக்கான அங்கீகாரம் என்ன? தங்களுக்கான உரிமைகள் என்ன? தாங்கள் ஈடுபடுவது ஒரு குற்றச்செயலிலா? என்பது பற்றி எந்த புரிதலும் இல்லாமல் குற்ற உணர்ர்ச்சியோடும், மன அழுத்தத்தோடும், உதவிக்கு யாரை அணுகுவது என்று தெரியாத தவிப்போடும் எத்தனையோ பாலியல் சிறுபான்மையினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த விளிம்புநிலை மனிதர்களுக்கான ஆதரவை, நாம் முதலில் முன்னெடுக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் முதலில் செய்து முடிப்போம்…. பிறகு பொறுமையாக பொதுச்சமூகத்தைக் கேள்வி கேட்கலாம்.
கடந்த ஒரு வருடமாய் தமிழகத்தில் பிரிவு 377ஐ எதிர்த்து நடைபெற்றுள்ள நிகழ்வுகள்
கடந்த வருடம் டிசம்பர் மாதம் பதினோராம் நாள் அன்று அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சென்னையிலும், தமிழகத்திலும் நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் பட்டியல் பின்வருமாறு:
11 டிசம்பர் 2013
உச்சநீதிமன்றத் தீர்ப்பு அளிக்கப்பட்ட தினம்.
இதைக் கண்டித்து சென்னை செய்தியாளர் சங்கம் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பிரிவு 377 பற்றிய அனைத்து தகவல்களுக்கும் காப்பகமாக திகழ நிறுவப்பட்ட http://377.orinam.net/ என்னும் இணையதளம் இந்த வழக்கு சார்ந்த உச்சநீதிமன்ற ஆவணங்கள், ஊடக வெளியீடுகள், சட்டபூர்வமான ஆலோசனைகள், சமுதாயத்திலிருந்து வந்துக்கொண்டிருந்த பகுப்பாய்வுகள் போன்றவற்றை ஒன்று திரட்ட தொடங்கியது.
15 டிசம்பர் 2013
இந்த நாள் ‘Global Day of Rage’, அதாவது ‘உலகந்தழுவிய வெஞ்சின தினம்’ஆக அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு இந்த நாளில் சென்னை செய்தியாளர் சங்கத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.
21 டிசம்பர் 2013
SIAAP/Pehchan நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் சென்னை வானவில் கூட்டணி உறுப்பினர்கள் தமிழக மாநிலத்தில் மற்ற மாவட்டங்களில் உள்ள பாலியல்/பாலின சிறுபான்மயினருடனும், பாலியல்/பாலின சிறுபான்மையினருக்காக பணிபுரியும் அமைப்புகளுடனும் தொடர்பு கொண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய நடவடிக்கைகளை பற்றி கலந்து ஆலோசித்தனர். இந்த சந்திப்பின் விளைவாக இந்த நாளில் தமிழ்நாடு வானவில் கூட்டணி உருவானது.
22 டிசம்பர் 2013
சென்னை வானவில் கூட்டணி உறுப்பினர்கள் SAATHII அலுவலகத்தில் கூடி தில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான strategy (யுக்திகள்) திட்டமிடல் ஆலோசனை சந்திப்பை skype மூலமாக கண்டனர். பின்னர் தங்கள் சிந்தனைகளை வானவில் உறுப்பினர்கள் இடையே பகிர்ந்துகொண்டனர்.
1 ஜனவரி 2014
தீர்ப்பு வந்த ஒரு மாத நிறைவை முன்னிட்டு செய்யவேண்டிய ஆர்ப்பாட்டத்தை பற்றியும் ‘ஒர்பாலீர்ப்பை எதிர்க்கும் கிறுத்துவர்கள்’ (‘Christians against Homosexuality’; CAH-) என்று சென்னையில் புதிதாக தோன்றியிருக்கும் குழுவின் நடவடிக்கைகளை எதிர்த்து செய்யவேண்டிய ஆர்ப்பாட்டத்தை பற்றியும் சென்னை வானவில் கூட்டணி ஒன்று கூடி சந்தித்து ஆலோசித்து.
4 ஜனவரி 2014
சென்னை வானவில் கூட்டணியை சேர்ந்த உறுப்பினர்களும், கிறுத்துவ மதத்தைச் சார்ந்த பாலியல்/பாலின சிறுபான்மையினரும் இணைந்து மத வெறியால் பரப்பப்படும் வெறுப்பை எதிர்த்து போராட ‘ஒர்பாலீர்ப்பாலர்களை வெறுக்கும் நபர்களுக்கு எதிரான கிறுத்துவர்கள்’ (‘Christians against Homophobia’; CAH+) என்ற குழுவை நிறுவினர்.
5 ஜனவரி 2014
CAH+ குழு சகோதரன் (Sahodaran) அலுவலகத்தில் அன்று காலை CAH- குழு நடத்திய ஆர்ப்பாட்டத்தை கண்டித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பின் விளைவாக ‘Christians against Homophobia’ என்ற ஒரு மின்னஞ்சல் பட்டியல் தொடங்கப்பட்டது. இந்த பட்டியல் பல்வேறு கிறுத்துவ மத போதகர்களை இணைத்து அவர்களது சமூகங்களை பாலியல்/பாலின சிறுபான்மையினரையும் கொண்டு செயல்படும் சமூகங்களாக ஆக்க முயன்று வருகிறது.
Catalyst என்கிற சென்னையை சார்ந்த மாணவர் கூட்டணி பாலியல்/பாலின சிறுபான்மையினரின் பிரச்சனைகளை பற்றி ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சி பிரிவு 377 ஏன் மாற்றியமைக்கப்படவேண்டும் என்ற கேள்வியை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது.
9 ஜனவரி 2014
சென்னையைச் சார்ந்த ஓரினம்/ Orinam என்ற கூட்டத்தின் துணையோடு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதுதல் என்னும் தேசிய அளவிலான ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் விளைவாக திரண்டுவந்த கடிதங்கள் என்ற இணையதளத்தில் காப்பகப்படுத்தபட்டுள்ளது.
11 ஜனவரி 2014
தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதம் முடிந்ததை முன்னிட்டு இந்த நாளில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் (Tamil Nadu Progressive Writers’ Association), Save the Tamils என்னும் ஈழ தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் குழு மற்றும் பல மாணவர் குழுக்கள் பங்கேற்றன.
ஜனவரி 2014
11.12.13 தீர்ப்பை மறுபடி பரிசீலனை செய்ய கோரி உச்சநீதிமன்றத்திடம் அளிக்கப்படவேண்டிய மனுவுடன் சேர்த்து சமர்ப்பிக்க affidavits (அப்பிடவிட்) எனப்படும் சத்திய கடிதாசிகள் சென்னையிலிருந்து தொகுத்து அனுப்பிவைக்க பட்டன.
23 பெப்ரவரி 2014
Nirmukta (Chennai FreeThinkers) எனப்படும் மதச்சார்பற்ற ஒரு மனிதநேய குழு பாலியல்/பாலின சிறுபான்மையினருக்கான உரிமைகள் பற்றியும், தவறான அபிப்ராயங்களுக்கு ஆளாகப்படும் நிலை பற்றியும், இவைகளை தவிர்க்க தேவையான சிந்தனைகளை பற்றியும் கலந்து உரையாட ஒரு பொது நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சி சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் பாலியல்/பாலின சிறுபான்மையினரை ஒன்று திரட்டி 377 ஏன் சீரமைக்க படவேண்டும் என்பதை பற்றி ஆலோசிக்கும் வாய்ப்பாக இருந்தது.
28 மார்ச் 2014
பிரிவு 377 பற்றி மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் ஒன்றை SIAAP/Pehchan ‘377ஐ எதிர்த்து 207’ (‘207 against 377’) என்ற குழுவின் மூலமாக நடத்தியது.
ஏப்ரல் – மே – ஜூன் – ஜூலை 2014
NALSA வழக்கில் திருநங்கை மற்றும் திருநம்பியினர் உரிமைகளை உறுதிப்படுத்தி வந்திருந்த தீர்ப்பை பற்றி பல கலந்துரையாடல்கள் இந்த இரு மாதங்களில் நடைபெற்றன. இந்த சந்திப்புகளில் NALSA தீர்ப்பும் 11.12.13 தீர்ப்பும் எந்தெந்த வகைகளில் முரண்பட்டிருக்கின்றன என்பதும் பதிவு செய்யப்பட்டது.
சென்னை வானவில் சுயமரியாதை மாதம் ஜூன் மாதம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த மாதத்தில் பல்வேறு கலை நிகழ்சிகளும், pride walk எனப்படும் சுயமரியாதை நடை பவனியும் பிரிவு 377ஐ எதிர்த்து மேற்கொள்ளப்பட்டன.
Reel Desires எனப்படும் பாலியல்/பாலின சிறுபான்மையினரின் அனுபவங்களை மையப்படுத்திய சர்வதேச திரைப்பட விழா சென்னையில் 24–26 ஜூலை நாட்களில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பல திரைப்படங்களும் கலந்துரையாடலும் பிரிவு 377ஐ பற்றி அமைக்கபட்டிருந்தது.
13 செப்டம்பர் 2014
மாநில அளவில் சட்டபூர்வமாக பிரிவு 377இல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற போராட்டத்தை நிறங்கள் (Nirangal) என்ற அமைப்பு தமிழ்நாடு வானவில் கூட்டணியின் துணையோடு நடத்தியது,
8 டிசம்பர் 2014
‘377ஐ எதிர்த்து 207’ என்ற குழுவின் மூலமாக பொதுமக்களுக்கான open hearing எனப்படும் பிரச்சனைகளை கேட்கும் நிகழ்ச்சியை SIAAP/Pehchan நடத்தியது. இதில் சென்னையை சார்ந்த பெண்கள் வழக்கறிஞர் சங்கம் இந்த இயக்கத்திற்காக ஆதரவும், மாநில அளவில் 377ஐ எதிர்த்து மேற்கொள்ளப்படவேண்டிய சட்ட பூர்வமான நடவடிக்கைகளுக்காக தங்கள் ஒத்துழைப்பையும் தெரிவித்தனர்.
This timeline was compiled by volunteers from Orinam and Nirangal. If we have inadvertantly left out any events, please let us know and we will add them.
பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை ஆதரித்து
எழுத்தாளர் பெருமாள் முருகனின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்றான மாதொருபாகன் (காலச்சுவடு வெளியீடு, நான்கு பதிப்புகள்) என்ற நாவல் தடை செய்ய நடக்கும் கொடுமையான அடக்குமுறைகளை எதிர்த்து ஓரினம் சார்பாக எங்கள் குரலை பதிவு செய்கிறோம். ஒரு சில அடிப்படைவாத வலது சாரி இந்துதுவ கட்சிகள், மற்றும் சில சாதிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு இப்பிரதி இலக்காகி உள்ளது. புத்தகத்தை தடை செய்ய கோருவதும், எழுத்தாளரை கைது செய்ய கோருவதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் அனுமதித்துள்ள கருத்துரிமைக்கு முற்றிலும் முரண்படுவதாக உள்ளது.
சிவனின் ஆண்பெண் வடிவமாகிய அர்த்தநாரி ஈஸ்வரனின் தமிழ் பெயரை தலைப்பாக கொண்ட இந்த புத்தகம் கொங்கு தமிழ் நாட்டின் மையப்பகுதியான திருஞ்சங்கோடு நகரத்தையும், அதன் கோவில் திருவிழா தொடர்புடைய வழக்கங்கள் என்று சிலரால் கருதப்படும் விடயங்களையும் குறித்து பேசுகிறது.
எனினும் இந்த புத்தகத்தின் சாரம் இதுமட்டுமல்ல என்பதை அறிகிறோம். இந்த புனைவில் ஆண்மை, பெண்மை மீது உள்ள வழக்கமான கருத்துகளுக்கு வேறொரு பரிமாணத்தை தந்துள்ளார் ஆசிரியர். குழந்தை இல்லாத அன்பான தம்பதியர்களான காளி மற்றும் பொன்னா பற்றியது இதன் முழு கதையும். முதன்மை ஆண் பாத்திரமான காளி மீது கட்டமைக்கப்பட்ட ஆண்மை கருத்தியல் எல்லா விதத்திலும் தோல்வி அடைகிறது. முதன்மை பெண் கதாபாத்திரமான பொன்னா குழந்தை பெறுவதற்காக முகமற்ற உடலுறவு சடங்கில் கலந்து கொள்வதன் மூலம் பெண்களுக்கான பாலியல் மரபுகளை கடந்து செல்கிறார்; அந்த இரவில் யாருடன் உறவு கொள்ள வேண்டும் என்பதை தான் தேர்ந்து கொள்ளலாம் என்றதையும், தன் விருபதிற்கு இணங்க இருக்கும் ஒரு அழகான கடவுளுடன் மட்டுமே உறவு கொள்ள வேண்டும் என்பதிலும் தெளிவான சிந்தனையுடன் திகழ்கிறாள். மேலும் இந்த புத்தகம் பொது புத்தியில் புரியபட்டுள்ள தெய்வீக தன்மைக்கு ஒரு புதிய வடிவத்தை தருகிறது. கடவுள் என்று வரும் போது பெண் ஒருத்தி பகுத்தறியவும், ஒரு முடிவு எடுத்த பிறகு அதில் நிலையாக நிற்க முடியும் என்பதையும், சாதியற்ற அன்பின் உருவாய் மட்டும் திகழ்கிறான்/திகழ்கிறாள் என்பதையும் அழகாக உணர்த்துவதாக இருக்கிறது. இவ்வாறே தெய்வீகத்தின் தன்மைக்கு ஒரு புதிய வடிவத்தை தருகிறது. ‘கடவுள் தந்த குழந்தை’ என்று நாம் கேட்ட வாக்கியம் உண்மையில் எதை குறிக்கிறது என்பதை மறுசிந்தனைக்கு உட்படுத்துகிறது.
பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் மாற்று பாலியல்களையும், பால் அடையாளங்களையும் எதிர்க்கும், ஆணாதிக்க அடையாளத்தை கடை பிடித்து பெண்களை ஒடுக்க நினைக்கும் அதே எச்சரிக்கைவாதிகள் தான் இந்த புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த கதையில் வரும் திருச்செங்கோடு நகரின் பெயரை இனிவரும் பதிப்புகளில் இருந்து நீக்க எழுத்தாளர் முடிவு செய்துள்ளார் என்ற போதிலும் இந்த நாவலை தடை செய்வதே இவர்களின் நோக்கம். மாற்று பாலினத்தரை ஒழிப்பதும், ஆணாதிக்க அடையாளத்தையும், விதிமுறைகளை வலுப்படுத்துவதையும் எதிர்த்து போராடும் ஒரு முற்போக்கு அமைப்பாக செயல்படும் ஓரினம் பாலினம் அல்லது இலக்கியம் எதுவாக இருப்பினும் ஒடுக்கப்படுபவர்கள் பக்கமே என்றும் நிற்கும். ஓரினம் – எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்து கொள்கிறது.
சமீபத்தில் பெருமாள் முருகன் தன் படைப்புகளை திரும்பி பெற்றுக்கொண்டார் என்பதை நாங்கள் அறிவோம். இந்த முடிவை அவர் மீண்டும் பரீசீலனை செய்ய வேண்டும் என்பது எங்கள் விருப்பமாக இருந்தாலும், அவர் சந்தித்த போராட்டங்களை எதிர்த்த முயற்சிகளை நாங்கள் மதிக்கிறோம், மேலும் நீண்ட் சுயபரிசோதனைக்கு பிறகே இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம். எனினும் இந்த புத்தகம் எப்போதும் வாழும் என்பதை நாங்கள் குறிப்பிடுகிறோம் – அவர் படைப்புகளின் பிரதிகள் எங்கள் நூலகங்களில் உள்ளன. அதை நாங்கள் தீயிட மாட்டோம். இந்த படைப்புகள் இனி நாங்கள் நடத்தும் விழாக்களிலும் பங்குபெறும் விழாக்களிலும் தனி இடத்திலும் பொது வெளியிலும் வாசிக்கப்பட்டும், விவாதிக்கபடும்.
“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு
தமிழ் சினிமா கண்ட மாபெரும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு,
தங்களின் “ஐ”(ய்யே) காவியம் கண்டேன். விக்ரம் போன்ற வித்தியாச நடிப்பு வெறி கொண்டவர்களும், ஆஸ்கர் ரவிச்சந்திரன் போன்ற தயாரிப்பாளர்களின் பணவெறிக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களின், ரசிக மனோபாவத்திற்கு பின்னுள்ள பெண்களின் மீதான பாலியல் வெறிகளுக்கும், ஹீரோயிசம் எனும் பொறிக்கித்தனங்களுக்கும், நாயகவழிபாட்டிற்கெல்லாம் தஞ்சம் தரும் ஆலயம, “a Shankar film” தான் என்பதை அறியாதார் யார்?!
நியாயமான ஒரு படைப்பை புரிதலின்றி மததுவேசமாக சித்தரித்து அப்படைப்பையும், படைப்பாளியையும் பின்வாங்க செய்யும் அதேவேளையில் தான் உங்களின் படைப்புச் சுதந்திரத்தின் வெற்றியையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதே மத துவேசத்தை காரணம் காட்டி “’டாவின்சி கோட்’’ தடை செய்யப்பட்ட நாட்டில், இதே மத துவேசத்தை காரணம் காட்டி தற்காலிக தடை செய்யப்பட்டு, அதுவே பெரும் விளம்பரமுமாகி வணிக வெற்றியும் அடைந்த ‘’விஸ்வரூபம்’’ படம் வெளியானதும் இங்கேதானே…
ஆனால், தாய்நாட்டு அகதிகளான, பாலியல் வெறியர்களான, அருவெருப்பான சமூக விரோதிகளான எங்களை எப்படியும் சித்தரிக்ககூடிய அருகதை கொண்ட தங்களைப் போன்ற மகா கலைஞர்களை மட்டும் யாரும் எதுவும் கூறப்போவதில்லை.
சமீபகாலமாக வலைதளங்களில் திரைப்படங்களை துவைத்து, கிழித்து தொங்கபோடும் வலைதள விமர்சகர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்களுக்குகூட இந்த ‘ஐ’ படம் அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கம் தான். இம்மொக்கை கதை, திரைக்கதையை கலாய்த்த அளவிற்கு ஒன்பதுகளை காயப்படுத்தியதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. இன்னும் கூடுதலாக ஒரு விமர்சகர் ‘’ இதில் ஒரு ‘நயன்’தாரா வேறு வில்லன்..!!’’ என்று எழுதியிருக்கிறார். குறைந்தபட்சம் இந்த ஆபத்தான ரசனையை வளப்படுத்திய விதத்தில் நீங்கள் உள்ளம் குளிர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
பிரம்மாண்டம், பிரம்மாண்டமான செட், பிரம்மாண்டமான கலைஞர்கள், அதிபிரம்மாண்டமான பட்ஜெட் தாண்டி ’’அதற்கும் மேல’’யும் சில விசயங்கள் இருப்பதை தங்களின் பிரம்மாண்ட மூளைக்கு முன் பகிர்ந்து கொள்ள இச்சிறுமதியாள் விரும்புகிறேன்.
”சிவாஜி” படத்தில் போகிற போக்கில் திருநங்கைகள் மீது காறி உமிழ்ந்ததை நினைத்துப் பார்க்கிறேன். சின்ன கலைவாணர் அவர்கள் ‘’இப்பத்தான் ஆப்பரேசன் பண்ணிட்டு வந்திருக்கு’’ என்று ஏளனமாக கூறியதும் ‘’சீ..சீ…’’ என்று அருவெறுப்புடன் எங்கள் சூப்பர் ஸ்டார் விலகிச் சென்றதை தூசி தட்டி தற்போது ’’அதற்கும் மேல’’ ப்ரம்மாண்டமாய் காறி துப்பியதைத் தான் பேச விரும்புகிறேன்.
வழக்கமான நாயகன் போலவே இதிலும் விக்ரம் அவர்கள் மிக ஆண்மையுடன் வில்லனை பார்த்து, முதல் பத்து நிமிடங்களிலேயே ‘’டே… பொட்ட..’” என்கிறார். நான் அதிர்ச்சியடையவில்லை, நானும் என்னை போன்ற பொட்டை பிறவிகளும் தமிழ் சினிமாவின இத்தகைய தொடர் பதிவுகளால் இவற்றிக்கு நன்கு பழகியிருக்கிறோம். விக்ரம் அவர்களுக்கும் கூட இந்த வசனம் ஒன்றும் புதிதல்ல, தனக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்த பாலா அவர்களின் ’’சேது’’ படத்தில் கூட “டே.. இப்பிடி பண்ணி பண்ணியே ஒருநாள் நீ அஜக்காவே மாறப்போற…” என்று சொன்னவர்தான். அதற்கு பிறகு இச்சொல்லாடலை அவர் பயன்படுத்தாத படங்களின் எண்ணிக்கைதான் குறைவாக இருகக்கூடும்.
‘’சதுரங்க வேட்டை’’ என்னும் சமூக அக்கறை கொண்ட படமியக்கிய திரு.வினோத் அவர்களே ‘’பொட்ட’’ என்று சொல்லாடலை எளிதாக பயன்படுத்துகையில்,, அதனை பிரபல திரைவிமர்சகர்களான கேபிள்சங்கர்களும் சப்பைக்கட்டு கட்டும் போது, உங்களிடம் மட்டும் அந்த கரிசனத்தை நாங்கள் எதிர்பார்க்கவா முடியும்.
அதுசரி உங்களால் ’’பொட்டை’’ என்று அறியப்படும் நாங்கள் உங்கள் ஆண்மை பராக்கிரமத்திற்கு முன் அப்படி என்னதான் குறைந்து விட்டோம்?! உள்ளம் முழுதும் பெண்மை குடியிருப்பதை அறிந்து எம்பாலினத்திற்கு நேர்மையாக இருக்கிறோமே ‘’அதற்கும் மேல’’வா உங்கள் பராக்கிரமம் சிறந்தது? திருநங்கையாக குடும்பத்தையும், அது தரும் அரவணைப்பையும், பாதுகாப்பையும் விட்டு வெளிவர துணிச்சல் இருக்கிறதே ‘’அதற்கும் மேல’’வா உங்கள் பராக்கிரமம் சிறந்தது? இந்திய பிரஜைக்குரிய சகல உரிமைகளும் மறுக்கப்பட்டு தாய்நாட்டு அகதிகளாவோம் என்பதை அறிந்தும் திருநங்கையாக குடும்பத்தை விட்டு வெளியேறுகிறோமே ’’அதற்கும் மேல’’வா உங்கள் பராக்கிரமம் சிறந்தது? பெற்றோர்களின் சொத்துசுகம் எதுவிமில்லாமல் சூன்யத்திலிருந்து எங்கள் வாழ்க்கையை நிர்கதியாக துவங்கி அடுத்தவர்களை சாராமல் வாழ்கிறோமே ‘’அதற்கும் மேல’’வா உங்கள் பராக்கிரம்ம் சிறந்த்து? தெருவிலும், வெள்ளித்திரையிலும் உங்கள் ஆண்பராக்கரசாளிகள் சொல்லாலும், செயலாலும் எங்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகளை துணிவோடு எதிர்கொண்டு தொடர்ந்து செல்கிறொமே ’’அதற்கும் மேல’’வா உங்கள் ஆண்மை பராக்கிரமம் வாய்ந்தது? அல்லது ‘பொட்டைகள்’ சோத்தில் உப்பு போட்டு தின்பதில்லை என்பது உங்களின் திண்ணமான எண்ணமா??
”ஐ” என்ற தலைப்பிற்கேற்ப ஐந்து வில்லன்கள் வேண்டுமென்று யோசித்தது சரி. அதற்கும் மேலே, கதைக்களத்திற்கேற்ப அதே துறைசார்ந்த வில்லன்களாக வைத்த உங்களின் மெனக்கெடலை பாராட்டுகிறேன்.. அதற்கும் மேல, பிரம்மாண்டமாக, ரிச் லுக்குடன், அதேசமயத்தில் வித்தியாசமான, காமடியான, வில்லன் வேண்டுமென, ஒரு ஸ்டைலிஸ்டாக திருநங்கையை வைத்த்தையும், அதுவும் ஆதண்டிக்காக இருக்க வேண்டுமென்பதற்காக உலக அழகியையே, அழகாக காட்டிய நிஜ ஸ்டைலிஸ்ட் ஓஜாஸ் ரஜினியையே ( எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயை அழகாய் காட்டியவர் இவர்தான்.. மொழி தெரியாத அவருக்கு என்ன கதை சொல்லி நடிக்க வைத்தீர்கள் என்பது தங்களுக்கே வெளிச்சம்.) நடிக்கவைத்ததில் நிஜமாகவே நான் மெரசலாகிட்டேன். ஆனால், அந்த கீழ்த்தரமான பாத்திரத்திற்கும் அவரது நிஜபேரான ஓஜாஸ்’யையே வைத்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் இயக்குநரே?
தான் வியக்கும், விரும்பும் அழகியாலயே இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்டைலிஸ்ட் என்று அறிமுகப்படுத்தப்பட்ட போதும், ஓஜஸ் மீது நாயகனுக்கும், நண்பனுக்கும் அவ்வளவு கீழ்த்தரமான பார்வையேன் வருகிறது. எல்லா இன்னல்களையும் கடந்து பல திருநங்கைகள் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள் தான். ஆனாலும், அவர்கள் ஏளனத்திற்குரியவர்கள், என்பதை பார்க்கும் ரசிகர்கள் மனதில் உறுதியாக விதைக்கத்தானே?!. தமிழ் ரசிகர்களே திருநங்கைகளை கலாய்க்க, ‘’காஞ்சனா’’ (திருநங்கைகளை சற்று கண்ணியமாகிய படம் என்றாலும், இறுதியில் அதையும் கலாய்க்க பயன்படுத்தும் ரசிகர்களை எண்ணி வியக்கேன்..!!) என்று அழைக்க அப்டேட் ஆகியிருக்கும் நிலையில் ‘’ஊரோரம் புளியமரம்..” என்று பாடுவது எதனால்? நீங்கள் எதிர்பார்த்ததை போலவே அந்த காட்சியில் ரசிகசிகாமனிகள் அரங்கம் அதிர சிரித்தார்கள்தான். என்ன அந்த அருவெறுப்பான சிரிப்பை மீறி, முதல்வன் படத்தில் வரும் புகழின் அம்மாவைப்போல என்னைப் போன்ற ‘பொட்டை’களை பெற்ற அம்மாக்களின் கேவல்கள் உங்கள் காதை எட்டியிருக்காது.
அதெப்படி, வெறும் திரையிலும், பொஸ்டர்களிலும் மட்டுமே கண்ட ஒரு அழகியை, அவள் அழகி என்பதால் மட்டுமே ஒரு ஆணழகன் காதலித்துவிடமுடியும், அதுவும் உண்மையான, நியாயமான, கல்மிஷம் இல்லாத காதலாகிறது., குற்றவுணர்வாலும், பரிதாபத்தாலும் ஒரு அழகியால், ஆணழகனை பரிசுத்தமாக காதலிக்கு முடிகிறது. ஆனால், ஒரு திருநங்கையின் காதல் உணர்வு மட்டும் எப்படி தங்களுக்கு அவ்வளவு நாராசமானதாகிறது. அவள் காதல், நாயகனால் மட்டுமல்ல, நண்பனாலும், நாயகியாலும், படத்தில் வரும் விளம்பர பட இயக்குநராலும் அருவெறுப்பாகவே பார்க்கப்படுகிறது. அதாவது இப்படத்தின் இயக்குநராகிய நீங்கள் வெறுப்பதைதான் சூசகமாக கூறுகிறீர்கள் இல்லையா?
அவரை ரிச்-திருநங்கையாக, காட்ட ஆரம்பத்தில் அழகான கேமரா ஆங்கிளை பயன்படுத்திய நீங்கள். அவரது காதல் புறக்கணிக்கப்படும் கணம் முதல் அவரை அசிங்கமாக மட்டுமே காட்ட பயன்படுத்திய காமிரா ஆங்கிளில் அசிங்கமாக தெரிந்தது ஓஜஸ் மட்டும் இல்லை நீங்களும்தான் என்பதை உணர்ந்தீர்களா?
இவ்வளவு வரைக்குமே உங்களிடம் நாகரீமாகத்தான் கோவம் கொள்ள நினைத்திருந்தேன். ஆனால், “9’” என்ற அறையெண்ணை காட்டி பின் ஓஜாஸை காட்டிய உங்கள் அரதபழசான, அருவெறுப்பான விளையாட்டை எண்ணி என்னால் கெட்டவார்த்தைகளால் வசைபாடாமல் இருக்கமுடியல்லை. ஏனெனில், இதே ‘’9’’ என்ற சொல்தான், என் பள்ளிகாலம் முழுதும் முள்ளாக குத்தி, கண்ணீர் சூழ சக மாணவர்களிடமிருந்து என்னை தனிமைப்படுத்தியது. இதே ‘’9’’ என்ற சொல்தான், இப்போதுவரையிலும் எந்த அற்பனும் என்னை சிறுமைபடுத்த பேராயுதமாக பயன்படுத்துகிறான். அவற்றோடு கூடுதலாக சமூகம் கற்றுக்கொடுத்த கெட்டவார்த்தைகள்தான் இப்போது என் கைவசம் இருப்பவை.
இருந்தாலும், கேபிள்சங்கர் போன்ற விமர்சனசிகாமனிகள் எனக்கு ‘நாகரீக வகுப்பு’ எடுப்பார்களே என்று அஞ்சி நானாகவே நாகரீகமாகவே தொடர்கிறேன்.
’’இப்படத்தில் எந்த மிருகங்களும் துன்புறுத்தப்படவில்லை’’ என்ற டிஸ்க்லைமருடன் துவங்கும் இப்படத்தில் தான், கிடைக்கும் ஒரு வாய்ப்பை கூட விடாமல் பாலியல் சிறுபான்மையினர் முதல், மாற்றுத்திறனாளிகள் வரை காயப்படுத்த தங்களுக்கு கட்டற்ற சுதந்திரம் அளித்திருக்கிறது நமது சென்சார் போர்ட். அதன் தாராள மனதை கண்டிக்காமல் உங்களை மட்டும் கேள்வி கேட்டு என்ன பயன்?
ஒரேயொரு படத்திற்காக இத்தனை மெனக்கெடலையும், கடின உழைப்பையும், தனது நேரத்தையும் கொடுத்து மகாகலைஞனாக உயர்ந்து நிற்கும் விக்ரமிடம் இதுபோன்ற அற்பகாட்சிகளின் நடிக்க வேண்டாமென என்னால் வேண்டுகோள் கூட வைக்கமுடியவில்லை. ஏனெனில், அடுத்த உலகநாயகனாக வேண்டுமென துடிக்கும் அவரது ஆதர்ச நாயகனான கமலும் கூட, வாசிப்பும், பகுத்தறிவும் கொண்ட நடிகரென நவீன இலக்கியவாதிகள் ஈசிக்கொள்ளும் அதே கமல்ஹாசன் அவர்களும்தான் ‘பொட்டை’என்னும் சொல்லாடலை தொடர்ந்து தமது படங்களிலும், “அதற்கும் மேல” ‘’வேட்டையாடு, விளையாடு’’ படத்தில் திருநங்கைகளையும், சமபால் ஈர்ப்பினரையும் தனது பங்கிற்கு சிறப்பாக மலினப்படுத்தியிருக்கிறாரே…
உங்கள் இருவருக்கும் மட்டுமன்றி, அனைத்து நடிகர்கள், காமடியன்கள், இயக்குநர்களுக்கும், ஒரேயொரு தகவல்.. நீங்கள் கொண்டாடும் ஆண்பராக்கிரமசாளிகள் மட்டுமே உங்கள் ரசிகர்கள் அல்ல. உங்களால் ஏலியனாக கருதப்பட்டு, மலினப்படுத்தப்படும் நாங்களும் உங்களின் ரசிகர்கள்தான். எங்கள் வீட்டிலும் டிவி பெட்டி உண்டு. நாங்களும் படங்கள் பார்க்கிறோம். ரசிக்கிறோம், சிரிக்கிறோம், அதுமட்டுமல்ல தவறாமல் சோற்றிலும் உப்பு போட்டுதான் சாப்பிடுகிறோம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
* English translation by PT is here
** Image source: HosurOnline.com